ஹன்சிகா ரொம்ப நல்ல பொண்ணு : டி.ராஜேந்தர் சர்ட்டிபிகேட்!
‘யான்’ தோல்விக்குப் பிறகு ஒரு நம்பிக்கையான இயக்குநர் ஜீவாவுக்கு கிடைத்திருக்கிறார். ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா தான் இப்படத்தின் இயக்குநர். ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிக்க எதிர்நாயகனாக நடித்திருக்கிறார் சிபிராஜ்.
நேற்று மாலை சென்னையில் நடந்த இப்படத்தின் ‘அத்து வுட்டா அத்து வுட்டா’ சிங்கிள் ட்ராக் ஆடியோ பங்ஷனில் டி.ராஜேந்தர் தான் சிறப்பு விருந்தினர்.
அவர் இருக்கிற இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்குமா என்ன? அந்த கலகலப்புக்கு கொஞ்சமும் நேற்று நடந்த விழாவில் குறைவைக்கவில்லை டி.ஆர்.
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நான் வாலு பட ரிலீசில் சிக்கிக் கொண்ட போது முதல் ஆளாக விஜய் சார்பில் எனக்கு உதவியாக வந்து நின்றார்.
அவருடைய படம் என்பதால் நான் இந்த விழாவுக்கு வந்தேன். ஏனென்றால் புலி படத்தின் விழாவில் கலந்து கொண்ட பிறகு நான் எந்த விழாவிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று நினைத்தேன். அந்த விழாவில் புலியை வர்ணித்து நான் பேசியதை எல்லோரும் நக்கல் செய்தார்கள். அதனால் தான் அப்படி ஒரு முடிவில் இருந்தேன்.
ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்காக இந்த விழாவுக்கு வந்தேன். அப்படி வந்தாலும் ஒரு ரசிகனாக வருகிறேன். என்னை மேடையில் எல்லாம் ஏற்ற வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் மேடையில் ஏற்றி பேசவும் வைத்து விட்டார்கள்.
எல்லோரும் பேசி முடித்த பிறகு என்னை இறுதியாக பில்டப்போடு பேசக்கூப்பிடுகிறார்கள். எதற்காக அப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் அந்தளவுக்கு பெரிய ஆளும் இல்லை என்றவர் ஹீரோ ஜீவா முதற்கொண்டு எல்லோரையும் பாராட்டி பேசினார் அப்போது ஹீரோயின் ஹன்ஷிகாவையும் பாராட்டினார்.\
இந்தப் படத்தோட நாயகி ஹன்ஷிகா ரொம்ப நல்ல பொண்ணு. நல்ல நடிகை. நான் வாலு படத்தில் பாடிய ஒரு பாடலை படமாக்க வேண்டியிருந்தது. 1 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட இருந்த அந்த பாடல் காட்சிக்கு ஹன்ஷிகாவை ஆடக்கூப்பிட்டேன். டி.ஆர் சாரா என்று கூட சொல்லாமல் டி.ஆர் அங்கிளா..? அவருக்காக கண்டிப்பாக வருகிறேன் என்றவர் வந்து எந்த கால்ஷூட் சொதப்பலும் இல்லாமல் ஆடி விட்டுப் போனார். அந்த சின்சியாரிட்டி ஒரு வட இந்திய நடிகையிடம் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது என்றவர் அவ்வளவு தான் ஹன்சிகாவைப் பற்றிச் சொல்வேன். வேறு ஏதாவது சொல்வேன் என்று எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல…. என்று சொல்ல அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.
விழாவில் போக்கிரிராஜா படக்குழுவினருடன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
