எல்லாப் படமும் பாகுபலி அல்ல ; கேளிக்கை வரியை ரத்து பண்ணுங்க… : அரசு மீது விஷால் பாய்ச்சல்

Get real time updates directly on you device, subscribe now.

vishal1

நாடு முழுவதும் ஒரே வரி என்று சொல்லி ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தினார் மோடி.

ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் திரைத்துறையினருக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் உள்ளாட்சி வரி 30 சதவீதம் கூடுதலாக விதித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்த்திரையுலகினர் இது திரையுலகை நசுக்கும் வேலை என்று கொதித்தனர். திரையரங்க உரிமையாளர்களோ தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தமிழக முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்களோடு திரையுலக முக்கியஸ்தர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முடிவில் 30% கேளிக்கை வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் இந்த வரியை முழுவதுமாக தமிழக அரசு நீக்குமென்று திரையுலகினரும், திரையரங்க உரிமையாளர்களும் எதிர்பார்த்த நிலையில் தற்போது, வரியை குறைத்திருக்கிறதே தவிர முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதன்படி தமிழ்மொழி படங்களுக்கு 10 சதவீத வரியும், மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரியையும் விதித்திருக்கிறது.

Related Posts
1 of 69

அரசின் இந்த முடிவு தமிழ்த் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ”அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது. அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது.பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும். 100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்பட வேண்டும் என்றும், அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி பார்க்கவில்லை. எல்லா படமும் பாகுபலி படம் அல்ல. திருட்டுத் தனமாக படங்கள் வெளிவருவதை அரசு 100% தடுக்க முடியுமா?? அதற்கான உத்திரவாதத்தை அரசு தந்தால் நாங்கள் இந்த வரியை ஏற்றுக் கொள்கிறோம்.

வங்கிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை .ஏற்கனவே, அதிக வட்டி விகிதத்துக்கு பணத்தை வாங்கி படங்கள் தயாரிக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிவிதிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது, அரசு அமைச்சக அதிகாரிகள், அமைச்சர்கள் , முதல்வர் உட்பட அனைவரிடமும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

நாளை மணிமண்டப திறப்பு விழா ரஜினி, கமல் ஹாசன் பங்கேற்க உள்ளனர். முதல்வர் பங்கேற்று இருந்தால் இந்த மணிமண்டப திறப்பு விழா சிறப்பாக இருந்திருக்கும். அடுத்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி முடிவுக்கு வரும் அதில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் சிலைகள் வைக்கப்படும். பின்னர் அதில் எம்.ஜி.ஆர் மற்றும் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறும்” என்றார்.

மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழ் திரையுலகினரின் கோரிக்கையாக இருந்தது. தற்போது அந்தக் கோரிக்கையை முற்றிலுமாக புறம் தள்ளி விட்டு கேளிக்கை வரி விதித்திருப்பதால் தமிழக அரசின் மீது திரையுலகினர் கொந்தளிப்பில் உள்ளனர்.