தனி ஒருவன் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

raja

ஜெயம் ரவி – ஜெயம் ராஜா இருவருடைய காம்பினேஷன்களில் ரிலீசான எல்லா ரீமேக் படங்களுமே வெற்றிப் படங்கள் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது உண்மை.

ரீமேஜ் படங்களை இயக்குவதில் ராஜாவாக இருந்த ஜெயம் ரவியின் அண்ணன் எம்.ராஜா முதல் தடவையாக எந்தப் படத்தையும் காப்பியடிக்காமல்,  ரீமேக்கும் செய்யாமல் நேரடித் தமிழ்ப்படமாக தந்திருக்கும் படம் தான் இந்த ‘தனி ஒருவன்’.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் ஜெயம் ரவியும் அவரது மூன்று நண்பர்களும் போலீஸ் ட்ரெயினிங் தவிர்த்து இரவானால் நடக்கும் சமூக விரோதச் செயல்களை யாருக்கும் தெரியாமல் முறியடிக்கிறார்கள்.

அப்படி ஒரு நாள் இரவில் ஒரு செயின் அறுப்புச் சம்பவம் நடக்கும் போது அதில் தொடர்புடைய மூன்று புள்ளிகள் சிக்குகிறார்கள். அதில் ஒருவனைப் பின் தொடரும் ஜெயம் ரவி அதில் எவன் பெரிய கையாக இருக்கிறானோ? அவனை அடியோடு அழிப்பது என்று முடிவெடுக்கிறார்.

அந்த ஒருவனை பின் தொடர்ந்தால் அங்கே அந்த மூன்று பேரையும் இயக்கும் இன்னொருவன் இருக்கிறான். அவர் தான் அரவிந்த் சாமி.

அதிர்ச்சியடையும் ஜெயம் ரவி போலீஸ் வேலையில் சேர்ந்த உடனே அரவிந்த் சாமியின் கொட்டத்தை அடக்குவது தான் முதல் வேலை என்று லட்சியத்தோடு கிளம்புகிறார்.

ஜெயம் ரவி தனது லட்சியத்தில் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

படம் ஆரம்பித்த மூதல் சீனிலிருந்து எண்டு டைட்டில் கார்டு வரை அப்படி ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு.

இவ்வளவு அசாத்திய திரைக்கதை திறமை அமைக்கும் திறமையை வைத்துக் கொண்டு எதற்காக ஜெயம் ராஜா ரீமேக் படங்களை எடுத்து தனது திறமையை கொச்சைப்படுத்திக் கொண்டார் என்பது தான் மிகப்பெரிய கேள்வி? படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது திறமை 1000 வாட்ஸ் பல்ப்பாக பளிச்சிடுகிறது.

ஜெயம் ரவிக்கு இந்த மாதிரியான கேரக்டர்களில் எல்லாம் நடிக்கச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. என்ன அங்கங்க அவர் பேசுற பஞ்ச் டயலாக்குகள் தான் ரசிகர்களுக்கு லேசான எரிச்சல். மற்றபடி அவருடைய கேரக்டர் ஒரு பொறுப்பான கேரக்டர்.

Related Posts
1 of 2

ஹீரோயின் நயன்தாராவுக்கு தமிழ்சினிமாவுல வர்ற வழக்கமான டூயட் சாங்க்ஸ் ஹீரோயினா மட்டும் இல்லாமல் கதையோட டர்னிங் பாயிண்ட்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்காகவே இடைவேளைக்குப் பிறகு தேவையில்லாத ஒரு டூயட் சாங்க்கை வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஜெயம் ரவியின் நண்பர்களாக வரும் கணேஷ் வெங்கட்ராம், ஹரீஸ் உத்தமன், அரவிந்த் சாமிக்கு அடியாளாக வரும் வம்சி கிருஷ்ணா, அரசியல்வாதியாக வரும் நாசர் என எல்லாக் கேரக்டர்களுமே டம்மியாக இல்லாமல் வருவது படத்தின் வேகத்துக்கு பூஸ்ட்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வில்லனாக வரும் அரவிந்த்சாமி தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கிறார். அசால்ட்டான, அமைதியான கொடூர வில்லனை பார்த்து எத்தனை நாளைச்சு என்கிற ரசிகர்களுக்கு அரவிந்த் சாமியின் கேரக்டர் செம தீனி.

அரவிந்த் சாமியின் அப்பாவி அப்பாவாக வரும் தம்பி ராமையா படத்தில் காமெடி இல்லாத குறையைப் போக்குகிறார்.

தொடர்ந்து ரீமேக் படங்களையே எடுத்துக் கொண்டிருந்த இயக்குநர் எம்.ராஜா இந்தப்படத்தில் தனது பெயரை மோகன் ராஜா என்று மாற்றி நேரடித் தமிழ்ப்படமாக தந்திருக்கிறார்.

சமூகத்தில் குறிப்பாக மருத்துவத் துறையில் நடக்கும் அவலங்களையும், அட்டூழியங்களையும் மிகத் தெளிவாக காட்சிப்படுத்தி சின்னச் சின்ன விஷயங்களைக் கூட திரையில் கொண்டு விரிவாகக் காண்பித்திருக்கிறார். இவ்ளோ திறமையை கையில் வெச்சுக்கிட்டு எதுக்கு ரீமேக்குன்னு போறீங்க ராஜா சார்..?

ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஹிப் ஹாப் தமிழாவின் இசை இரண்டுமே படத்தின் வேகத்துக்கும், விறுவிறுப்புக்கும் ஈடு கொடுத்திருக்கிறது.

”நல்லது செய்ய கடவுளாலேயே முடியாது. சாதாரண மனுஷன் நாமெல்லாம் எங்க..?” மாதிரியான சுபா- மோகன் ராஜாவின் வசனங்கள் ‘பளிச்’.

சாதாரண வழக்குகளிலேயே நீதிமன்றங்களில் வீடியோ ஆதாரங்களை எடுத்துக் கொள்வதில்லை. அப்படி இருக்கும் போது மருத்துவத் துறையில் நடந்த மிகப்பெரிய மோசடிக்கு எப்படி வீடியோவை ஆதாரமாக நீதிபதி ஏற்றுக்கொள்கிறார் என்று தெரியவில்லை. இப்படி சின்னச் சின்ன லாஜிக் மீறல்களும், படத்தின் நீளமும் மிகப்பெரிய குறை.

தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே சீரியஸான கதைக்கு அது சார்ந்த நெறைய விஷயங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார். அதை திரைக்கதையில் இணைத்து ஒரு நல்ல கருத்துள்ள படமாகத் தந்து தனி ஒருவனாக வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.