”பாண்டியராஜனே கவலைப்பட்டால் நானெல்லாம் எங்கே போவது..?” – பட விழாவில் நெகிழ்ந்த பாக்யராஜ்!
ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், மீரா கதிரவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், நடிகர்கள் பரத், , ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார், நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலை யெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்து விட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்து விட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும் போது புது தேஜஸ் தெரிகிறது.” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசவந்த இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதாவது, “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார்.. அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன்…
பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச் சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது.. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது.. ஆனாலும் அப்போது அந்தப் படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்து விட்டேன்.. அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும்.. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார்.. அந்த வகையில் இந்தப் படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார்.. சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்” என வாழ்த்திப் பேசினார்.