துப்பறிவாளன் – விமர்சனம்
RATING : 3.5/5
நட்சத்திரங்கள் : விஷால், பிரசன்னா, வினய், பாக்யராஜ், சிம்ரன், அனுஇமானுவேல், ஜான்விஜய், ஆண்ட்ரியா, தலைவாசல் விஜய், ரவிமரியா, அஜய்ரத்னம், ஜெயபிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : மிஷ்கின்
இசை : அரோல் கரோலி
வகை : ஆக்ஷன்
சென்சார் சர்ட்டிபிகேட் : U/A
நேரம் : 2 மணி நேரம் 39 நிமிடங்கள்
கமர்ஷியல் ஹீரோவான விஷாலை அக்மார்க் மிஸ்கின் டைப் ஹீரோவாக மாற்றிப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பம் தான் இந்த டிடெக்டிவ் சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘துப்பறிவாளன்.’
தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் விஷால். அவருடைய உதவியாளர் பிரசன்னா. காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல சிக்கலான கேஸ்களை கூட அசால்ட்டாக துப்பறிந்து விடுவார்.
அப்படிப்பட்டவரிடம் ஒரு சிறுவன் தன்னுடைய நாய்க்குட்டி இறந்து விட்டது. அது எப்படி இறந்தது? அதைக் கொன்றது யார்? கண்டுபிடித்து தர முடியுமா? என்று கேட்டு விட்டு அவன் சேமித்து வைத்திருந்த 820 ரூபாயை கட்டணமாகக் கொடுக்கிறான்.
அதற்கு முன்பு 50 லட்சம் ரூபாய் தருகிறேன், காணாமல் போன என் மகளை கண்டுபிடித்துத் தா என்று விஷாலிடம் வருகிறார் ஒரு கோடீஸ்வரர். அந்த கேஸை துப்பறிய மறுக்கும் விஷால் அந்தச் சிறுவனின் கேஸை எடுத்துக் கொள்கிறார்.
இதற்கிடையே சிம்ரனின் கணவன் வின்சென்ட் அசோகனும், அவருடைய மகனும் அவர் கண் முன்னாலேயே வீட்டு மாடியில் மின்னல் தாக்கி இறந்து விடுகிறார்கள்.
அதேபோல ஒரு காவல்துறை உயர் அதிகாரியும் பணியில் இருக்கும் போதே காவல்துறை அலுவலகத்தில் திடீரென்று ரத்தம் கக்கி மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.
சிறுவனின் நாய் கொலைக்கான காரணத்தை துப்பறிந்து அதன் பின்னாலேயே செல்கிற போது வின்சென்ட் அசோகன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரி இறந்து போனதற்கான தடையங்கள் விஷாலுக்கு கிடைக்கிறது.
அந்தத் தடையங்களை வைத்து தனது துப்பறிதலில் அடுத்த லெவலில் போகும் விஷாலுக்கு கொலைகளை விபத்தாக மாற்றி கொள்ளையடிக்கும் ஒரு சதிகாரக் கும்பல் இருப்பது தெரிய வருகிறது? அந்தக் கும்பல் யார்? அவர்களை விஷால் எப்படி பொறி வைத்துப் பிடிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
கமர்ஷியல் படங்களில் பஞ்ச் டயலாக் பேசி, கையைக் காலை ஆட்டி டான்ஸ் ஆடி, பத்து பேரை தூக்கி பந்தாடுகிற மாஸ் ஹீரோவாக ரெகுலர் விஷாலை இதில் பார்க்கவே முடியாது. மாறாக விஷாலே முழுமையாக தன் டைப் ஹீரோவாக்கியிருக்கிறார் மிஸ்கின். திரையில் இப்படி ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஷாலைப் பார்ப்பதே அவருடைய ரசிகர்களுக்கு புது அனுபவமாகத்தான் இருக்கும்.
கணியன் பூங்குன்றன் என்று அவர் ஏற்று நடித்திருக்கிற டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் மிஸ்கின் படங்களில் நாம் பார்த்த ஹீரோக்களின் மேனரிசங்களை வெளிப்படுத்தி வழக்கமான நடிப்பில் ரொம்பவே வித்தியாசம் காட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் விஷாலில் கடின உழைப்பு பாராட்டுக்குரியது. குறிப்பாக சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட்டில் விஷால் போடுகிற சண்டை ஹாலிவுட் படங்களைப் பார்த்த ஒரு உணர்வைத் தரும். புத்தகங்களுக்கு மத்தியிலேயே எப்போதும் குடியிருப்பவர் ஒரு நாடி ஜோசியரைப் போல தன்னைப் பார்க்க வந்தவர் எதற்காக வந்தார் என்று முன்னமே கணித்துச் சொல்வதெல்லாம் அக்மார்க் சினிமாத்தனம். சிரிப்பைத் தான் வரவைக்கிறது.
விஷாலின் நண்பராக வருகிற பிரசன்னா அவரோடு படம் முழுக்க ட்ராவல் செய்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி கூடவே இருந்தும் விஷாலில் சில நடவடிக்கைகளை அவராலேயே புரிந்து கொள்ள முடியாதது ஆச்சரியம் தான்.
நாயகியாக வரும் அனு இமானுவேல் படத்தில் தேவையில்லாத கேரக்டர். பிக்பாக்கெட் அடிக்கிற கேரக்டருக்கு அவருடைய முகம் பொருந்தவில்லை. அதேபோல விஷால் ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்து இங்கு போனால் வேலை கிடைக்கும் என்று சொல்லி அனுப்பியும் கூட அடுத்த நாள் அங்கு போகாமல் பிக்பாக்கெட் அடித்து விட்டு மாட்டுவதும், பின்பு விஷால் வீட்டிலேயே வேலைக்காரியாக மாறுவதும் சுவாரஷ்யமாக இல்லை.
அவ்வளவு அமைதியான பெண்ணிடம் எந்தக் காரணமும் இல்லாமல் விஷால் எரிந்து எரிந்து விழுவது என்பது மிஸ்கினுக்கே உரிய குசும்பு.
ஹீரோவாக வந்த வினய் இதில் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அமுல்பேபி முகத்திலும், அது தெரியாதபடி கொடூர வில்லத்தனத்தை லைட்டாக சிரித்துக் கொண்டே செய்வது செம ஷார்ப்.
பாக்யராஜ் படத்தில் நடித்திருக்கிறார் என்பதை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தான் தெரியும், அந்தளவுக்கு அவருடைய கெட்டப்பையும் மாற்றி அமைதியாகவே உலாவர விட்டிருக்கிறார் மிஸ்கின். இப்படி ஒரு பாக்யராஜை படத்தில் பார்ப்பதும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.
சேஸிங், கிளைமாக்ஸ் ஆகிய இடங்களில் ஆக்ஷன் பட ஹீரோயின் போல அசத்துகிறார் ஆண்ட்ரியா.
ஜான் விஜய், ஷாஜி, ‘ஆடுகளம்’ நரேன், தலைவாசல் விஜய், சிம்ரன், ஜெயப்பிரகாஷ், அபிஷேக், ரவி மரியா என எக்கச்சக்கமான தெரிந்த முகங்கள். எல்லோருமே சின்னச் சின்னதாய் வந்து விட்டுப் போகிறார்கள்.
கேமரா ஆங்கிள்கள், சுரங்கப் பாதை, ஹாஸ்பிட்டல் சண்டை, ப்ரிட்ஜ் ஃபைட், முரட்டு ஆசாமி போல ஹீரோயினிடம் ஹீரோ கத்தி கத்திப் பேசுவது என மிஸ்கின் ஸ்டைல் காட்சியமைப்புகள் இதிலும் உண்டு. நல்லவேளையாக டாப் ஆங்கிளில் கேமராவை வைத்து 1 நிமிடம் கழித்து ஒருவன் சாலையில் ஓடி வருவது அவனை பின்னால் நான்கைந்து பேர் துரத்துவது மாதிரியான நீளமான காட்சிகள் இல்லாதது நிம்மதி.
படத்தில் மனம் திறந்து பாராட்டியே ஆக வேண்டியது அரோல் கொரேலியின் பின்னணி இசை. படம் முழுக்க மெலிதாக ஒலித்துக் கொண்டே இருக்கிற அவருடைய வயலின் இசை மனசை லேசாக்கி காட்சிகளோடு ஒன்றிப்போகச் செய்து விடுகிறது.
ஒட்டுமொத்த காவல்துறையும் விஷாலை மட்டுமே நம்பியிருப்பது, அத்தனை போலீஸ் அதிகாரிகள் சுற்றி வளைத்திருந்தும் மொட்டைத்தலை ஆசாமி தற்கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைந்து ஆண்ட்ரியாவை எளிதாக தப்பிக்க விடுவது மாதிரியான சில லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் ஸ்டைலான மேக்கிங்கால் டிடெக்டிவ் த்ரில்லராகக் கொண்டாட வைத்திருக்கிறான் இந்த ‘துப்பறிவாளன்.’