படத்தோட டைட்டில் தான் ‘ட்யூப்லைட்’ : ஆனா படம்?

Get real time updates directly on you device, subscribe now.

Tube Light

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அதனாலோ என்னவோ சமீபகாலமாக தமிழ்த்திரையுலகில் வித்தியாசமான, புதிய கதையம்சமுள்ள படங்களோடு அறிமுகமாகிறார்கள் புதுமுக இயக்குநர்கள்.

அந்த வகையில் ‘ஆஸ்ட்ரிட்ச் மீடியா புரொடக்‌ஷன்’ சார்பில் ரவி நாராயணன் தயாரித்து, அறிமுக இயக்குநர் இந்த்ரா இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் தான் ‘டியூப்லைட்’.

இதில் இந்த்ராவுக்கு ஜோடியாக அதித்தி நடிக்க, நடிகர் பாண்டியராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும், ‘டம்மி டப்பாசு’ புகழ் பிரவீன் பிரேம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

“ஒரு டியூப்லைட் பிரகாசமாக ஒளிர்வதற்கு குறைந்தது 3 முதல் 5 வினாடிகள் வரை தேவை. ஏறக்குறைய அதே மாதிரி தான் இந்த டியூப்லைட் படத்தோட குணாதிசயமும் இருக்கும். சாதாரணமாக சொல்லப்படும் எந்த ஒரு விஷயமும், அவருக்கு ஐந்து வினாடிகள் கழித்து தான் கேட்கும். புரியும். இது தான் டியூப்லைட் படத்தின் கதை கரு.

இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் சார் நடித்து இருக்கிறார். இதுவரை யாரும் கண்டிராத வித்தியாசமான பாண்டியராஜனை ரசிகர்கள் காண்பார்கள் என்பதை உறுதியாகவே சொல்லுவேன்.

படத்தின் டைட்டில் தான் கேட்ட உடனே சிரிப்பை வரவழைக்கிற மாதிரி இருக்கும். ஆனால் படத்தில் காமெடியோடு திரைக்கதையில் ஒரு புது யுக்தியையும்  கையாண்டிருக்கிறாராம் இயக்குநர் இந்த்ரா.

அதென்ன?

நான் நகைச்சுவை ஜாம்பவான்கள் சார்லி சாப்ளின் மற்றும் மிஸ்டர் பீன் ஆகியோரின் மிக பெரிய ரசிகன். ஆதலால், வசனங்கள் இல்லாமல், உடல் அசைவுகளை கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவை யுக்தியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன்.

சமீபகாலமாகவே இந்த வகையான நகைச்சுவை காட்சிகள் நம் தமிழ் படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது. நிச்சயமாக
எங்களின் ‘டியூப்லைட்’ படம் உடல் அசைவுகளை கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவை முறைக்கு புத்துயிர் கொடுக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் டியூப்லைட் படத்தின் கதாநாயகனும், இயக்குநருமான இந்த்ரா.