விதார்த் ஒரு போராளி! – ‘ஏஏஏ’ இயக்குனர் பாராட்டு
கதை தான் நாயகன் என்று ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விதார்த்.
அந்த வகையில் விதார்த் நடிப்பில் வண்டியை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்திருக்கிறார்.
விதார்த் ஜோடியாக சாந்தினி நடிக்க, ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார்.
படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய விதார்த் ”பத்திரிகையாளர்கள் பாராட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. ‘வீரம்’ படத்தின் போது எனக்கு இந்த கதையை சொல்ல வந்தார்கள். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் நான்கு கேமரா வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குனர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் அவரை பார்த்தாலே பயம்.
‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும் போது இயக்குனர் ராதாமோகன் என் நடிப்பை பாராட்டி தள்ளினார். அதற்கு காரணம் இந்த படத்தில் நான் எடுத்த பயிற்சி தான். இந்த படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம். தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர்தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார்.
‘குப்பத்து ராஜா’ என்ற ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அது தான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் நடிச்சிருக்கேன், எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம் என்றார் நடிகர் விதார்த்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ”விதார்த் ஒரு நல்ல நடிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு போராளி. நீண்ட காலமாகவே போராடி வருகிறார். ‘பொல்லாதவன்’ படத்துக்கு பிறகு பைக்கை வைத்து ஒரு படம், வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
விழாவில் நிர்வாக தயாரிப்பாளர் கர்ணா ராஜா, ஸ்டண்ட் சிறுத்தை கணேஷ், பாடலாசிரியர் சங்கீத், நடன இயக்குனர் ஜாய் மதி, நாயகி சின்னு குருவில்லா, எடிட்டர் ரிஷால் ஜெய்னி, கலை இயக்குனர் மோகன மகேந்திரன், நடிகர்கள் ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர், ரவி, இயக்குனர்கள் ராகேஷ், சினிஷ், எடிட்டர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.