வீரசிவாஜி – விமர்சனம்
RATING : 2.5/5
‘வாகா’ படம் விக்ரம் பிரபுவுக்கு எந்த மாதிரியான ரிசல்ட்டைக் கொடுத்தது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நல்ல வேளையாக இந்தப்படம் அந்தளவுக்கெல்லாம் மோசம் இல்லை. மாறாக ஒரு பரபரப்பான த்ரில்லர் ஆக்ஷனாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயக்.
நேர்மையாக டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கும் ஹீரோ விக்ரம் பிரபு ஒரு அனாதை. அந்த அனாதைக்கு அக்காவாக மெஸ் ஒன்றை நடத்துகிற வினோதினியும், அவரது மகளும் தான் சொல்லிக் கொள்கிற உறவு.
இப்படிப் போகிற விக்ரம் பிரபுவில் வாழ்க்கையில் டூவீலரை ஓட்டிக் கொண்டு அவருடைய கார் பம்பரில் இடித்து எண்ட்ரி கொடுக்கிறார் நாயகி ஷாமிலி.
எந்தப் பொண்ணைப் பார்த்ததும் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குதோ அவதான் உன்னோட காதலி என்பார்களே? அப்படியே தான் ஷாமிலியைப் பார்த்ததும் விக்ரம்பிரபுவோட மனசுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குது, பேக்கிரவுண்ட்ல இளையராஜா மியூசிக் கேக்குது, காதலும் வருகிறது.
திடீரென்று அக்காவின் மகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடினால் மூளையில் கட்டி, 25 லட்சம் ரூபாயோடு வந்தால் ஆபரேஷன் செய்து காப்பாற்றி விடலாம் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள்.
பணத்தை புரட்டுவதற்காக தனது சொந்தக் காரை வங்கியில் வைத்து 5 லட்சம் ரூபாயை வாங்கி ரோபோ ஷங்கரிடம், யோகிபாபுவிடம் கொடுத்து விட, அவர்களிடமிருந்து பணத்தை மொத்தமாக அடித்து விட்டு எஸ்கேப் ஆகிறார்கள் ஜான் விஜய்- மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பண மோசடிக் கும்பல்.
எப்படியாவது இழந்த பணத்தை மீட்க வேண்டுமென்று கிளம்புகிற விக்ரம் பிரபு அவர்களிடமுள்ள மொத்த பணத்தையும் அடித்துக் கொண்டு வருகிற வழியில் ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொள்கிறார். விளைவு சமீபத்திய சம்பவங்களெல்லாம் மறந்து விடுகிறது.
அதிலிருந்து அவர் விடுபட்டாரா? சிறுமியின் ஆபரேஷன் என்னவானது? ஷாமிலியுடனான காதல் கை கூடியதா? என்பதே கிளைமாக்ஸ்.
இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கிட்டிருந்தால் ஏன் சீன்களை கொஞ்சம் புதிதாக யோசித்திருந்தால் கூட ஒரு பக்காவான விறுவிறு… ஆக்ஷன் த்ரில்லராக வந்திருக்கும்.
ஆனால் ”இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவாண்டா” என்று பாதிக்கப்பட்ட ஒருவர் கத்திச் சொல்லும் போதும் ’’ஒரு பொண்ண பார்த்த உடனே மனசுக்குள்ள இளையராஜா பாட்டு கேக்கணும்” என்று ஹீரோ சொன்ன உடன் ஹீரோயின் ஷாமிலியை கொஞ்சம் கொஞ்சமாக கேமராவை உயர்த்தி முகத்தை முழுசாகக் காட்டுவதும் மாதிரியான நாம் ஆயிரக்கணக்கான படங்களில் பார்த்து சலித்த காட்சிகளோடு திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குநர்.
இது போன்ற பரபர ஆக்ஷன் கதைகக்கு பெர்பெக்ட் ஹீரோவாக ஃபிட்டாகி விடுகிறார் விக்ரம் பிரபு. ஆக்டிங், ஆக்ஷன், டான்ஸ் என வரும் காட்சிகள் அத்தனையிலும் அதகளம் செய்கிறார். அதே சமயம் அவர் தேர்ந்தெடுக்கிற கதைகளில் இயக்குநர்கள் ஏதாவது புதுசாக சீன்களை வைக்கிறார்களா? என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம் விக்ரம் சார்…
ஃபைவ் ஸ்டார் சாக்லேட் விளம்பர கேரக்டர்களான ரமேஷ் – சுரேஷ் என்கிற இரட்டை கேரக்டர்களில் ரோபோ ஷங்கரும், யோகி பாபுவையும் இறக்கி விட்டிருக்கிறார்கள். இருவரும் வருகிற காட்சிகளில் காமெடி களை கட்டுகிறது. அதிலும் நினைவுகளை இழந்த நேரத்தில் விக்ரம் பிரபுவிடம் மாட்டிக்கொண்டு செமத்தியாக மொத்தை வாங்குவது எக்ஸ்ட்ரா காமெடி!
விக்ரம் பிரபுவுக்கு படத்தில் இருக்கிற ஸ்பேஸ் நாயகியாக எண்ட்ரி கொடுத்திருக்கும் ஷாமிலிக்கு இல்லை. அவருக்கு இல்லாமல் அப்படி இருந்ததே நல்லது தான்.
பார்க்கிறார். சிரிக்கிறார். ரொமான்ஸ் செய்யச் சொன்னால் என்னன்னவோ ரியாக்ஷனை கொடுக்கிறார். வராத நடிப்பை வா வா என்று வர வைக்க ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார் இயக்குநர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
ஸ்டைலீஷான வில்லத்தனத்தில் கவர்கிறார் ஜான் விஜய். கூடவே அவரது அடியாளாக வருகிற மொட்டை ராஜேந்திரன் படம் முழுக்க அவ்வப்போது தலை காட்டினாலும் அந்த ஃபாரீன் பிகருடன் ‘மின்வெட்டு நாளில் மின்சாரம் போல வந்தாயே’ பாடலில் அச்சு அசல் சிவகார்த்திகேயன் மாதிரியே டான்ஸ் ஆடி அசத்தும் போது தியேட்டரில் பறக்கிறது விசில் சத்தங்கள்!
”தாறுமாறு தக்காளி சோறு”, ”சொப்பன சுந்தரி” என சுகுமாரின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவில் தாளம் போட்டு துள்ள வைக்கிறது இமானின் இசை!
“நம்புறவங்களை மட்டும் தான் ஏமாத்த முடியும். நம்பாதவங்களை எப்படி ஏமாத்த முடியும் ..?” என ஆங்காங்கே வருகிற வசனங்கள் ‘நச்’.
10 நாள்ல சிறுமியோட உசுர காப்பாத்துறதுக்காக 25 லட்சம் தேவைப்படுது. அதுக்காக ஓடுகிற ஹீரோ கையில இருக்கிற பணத்தையும் இழந்துட்டு நிக்கிறப்போ அவருக்குள்ள என்ன ஒரு வெறி வரும்?
படம் பார்க்கிற ரசிகர்களுக்கும் உள்ளுக்குள்ள அந்த வெறியை வர வைக்கிற இடத்தை கொஞ்சம் புதுசாக ஜெயித்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயக்.
வீர சிவாஜி – புத்திசாலி!