சொந்தக் காசில் படமெடுக்கிற ஹீரோக்கள் தான் பாராட்டுக்குரியவர்கள்! : இயக்குநர் சற்குணம் பரபரப்பு பேச்சு!

Get real time updates directly on you device, subscribe now.

veeraiyan

பாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன், வேலா.இராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள “வீரையன்” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர்கள் சீனு ராமசாமி, சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன், கே.எஸ்.தங்கசாமி மற்றும் ‘கில்டு’ தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். ‘வீரையன்’ இசைத்தட்டை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட இயக்குநர்கள் சற்குணம் மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக் கொண்டனர்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், முதலில் “வீரையன்” படத்தின் தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். ஏனெனில், இந்த மாதிரியான படங்கள் தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தான் பல திறமையான கலைஞர்களை வழங்குவதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது என்று நான் சொல்வேன்.

எனவே இந்த மாதிரியான படங்களையும், கலைஞர்களையும் பத்திரிகை நண்பர்கள், மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். விண்ணில் பறக்க நினைக்கிற இந்த கலைஞர்களை உள்ளங்கையில் தாங்கி கைப்பிடித்து நடத்திச் செல்ல வேண்டும்.

நான் இங்கே வந்தது இனிகோ பிரபாகரன் என்கிற ஒற்றை மனிதனுக்காகத்தான்.

இனிகோ பிரபாகரன், தமிழ் சினிமாவில் இன்று இருக்கக்கூடிய முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருக்கும் நிகரான ஒரு கதாநாயகன். எனக்கும் இனிகோ பிரபாகரனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கிறது. கண்டிப்பாக அது நடக்கும். காலம் அந்த வாய்ப்பை வழங்கும் என்றார்.

(இனிகோ பிரபாகரன், சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டிய வாய்ப்பு, அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் தவறிப் போனது. அதோடு, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களிலும் சீனு ராமசாமி அழைத்தும் வேறு காரணங்களால் இனிகோ பிரபாகரன் நடிக்க முடியாமல் போனதை பற்றி, இனிகோ தன் பேச்சில் குறிப்பிட்டார்.)

இயக்குநர் சற்குணம் பேசுகையில், திறமை இருந்தும் தன்னடக்கத்தோடு பேசிய இந்த படத்தின் இசையமைப்பாளர் அருணகிரிக்கு என் அன்பின் வாழ்த்துகள்.
“வீரையன்” பாடல்கள் யதார்த்தமாக இருக்கிறது. பாடலாசிரியர்கள் யுகபாரதி, கார்த்திக் நேத்தாவிற்கும் வாழ்த்துகள். இந்த படத்தின் இயக்குநர் பரீத், என் முதல் படம் களவாணி படத்தின் தயாரிப்பாளர் நசீர் சாரின் மச்சானாக எனக்கு அறிமுகமானவர்.

களவாணி படம் முழுவதும் என்னுடன் நிர்வாக தயாரிப்பளராக பணியாற்றினார். மிகுந்த ரசனைக்காரர். இந்த கதையை என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறார். சொன்னது போலவே எடுத்திருக்கிறார்.

உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய மிகப்பெரிய கலைஞர்கள் யாரென்றால் சொந்தக்காசில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள், சொந்தக்காசில் படம் எடுக்கிற கதாநாயகர்கள் தான். வீரையன் படத்தின் இயக்குநர் பரீத், படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரும் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.