வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பார்வை!
ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் திரவ் வழங்கும், அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் ‘வெப்பம் குளிர் மழை’ -மனித குலத்திற்கு உள்ள அச்சுறுத்தலைக் கையாளும் படம் இது.
சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. அந்த வகையில் ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான திரவ்வின் வரவிருக்கும் திரைப்படமான ‘வெப்பம் குளிர் மழை’ ஒவ்வொரு பார்வையாளரிடமும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் அத்தகைய சிக்கலை ஆராய்கிறது. இந்தப் படத்தின் முதல் பார்வையை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், படத்தின் முதல் பார்வை மிக அழுத்தமாகவும் வித்தியாசமான முறையிலும் இருப்பதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது. அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்றும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கூறுகிறார்.