Book My Show தளத்தில் வரவேற்பை பெற்ற’தி கோட் லைஃப்’!

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ வருகிற 28 ஆம் தேதி மார்ச், 2024 அன்று உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதற்கு சான்றாக, புக் மை ஷோ தளத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘கல்கி’, ‘தேவரா’ மற்றும் ‘இந்தியன்2’ போன்ற பான் இந்திய படங்கள் வெளிவர இருந்தாலும் அவற்றைத் தாண்டி, ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ‘புஷ்பா2’ படத்திற்காக 170,000+ பார்வையாளர்கள் ஆர்வம் காட்டியிருக்கும் அதே சமயத்தில், 129,000+ பார்வையாளர்கள் ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். அற்புதமான திரையரங்க அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படம் சிறந்த சினிமா அனுபவத்தைத் தரும் என்பதையும் தாண்டி, படம் பார்க்கும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் எதாவது ஒரு பின்னணியில் நிச்சயம் தங்களை படத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.
மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது.