‘றெக்க’ கமர்ஷியலா மாஸா வந்திருக்கு! : விஜய் சேதுபதி செம ஹேப்பி

எளிமை தான் என்னுடைய அடையாளம் என்பதில் தெளிவாக இருக்கிறார் விஜய் சேதுபதி.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரிசைக் கட்டி நின்றாலும் அத்தனையையும் பைக்குள் போட்டுக்கொள்ளாமல் கதை, கேரக்டர் என பல விஷயங்களைப் பார்த்து தான் படங்களை கமிட் செய்கிறார். அப்படி தனக்கென்று உள்ள பக்கத்து வீட்டுப் பையன் என்கிற ரெகுலர் இமேஜை மாற்றுவதற்காக கமர்ஷியலாக களமிறங்கியிருக்கும் படம் தான் ”றெக்க.”
ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமிமேனன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை காமன் மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரித்திருத்திருக்கிறார். வருகிற அக்டோபர் 7ம் தேதி ”ரெமோ” ரிலீசாகும் அதேநாளில் ”றெக்க” படமும் ரிலீசாகிறது. இன்றைய தேதியில் விஜய் அஜித்துக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதியைத் தான் போட்டியாளராக அடையாளப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிக மகாஜனங்கள்.
ஆனால் விஜய் சேதுபதியோ சிவகார்த்திகேயன் என்னுடைய சக கலைஞன் அவருடைய படங்களும் பெரிய அளவில் ஹிட்டாக வேண்டுமென்று சொல்கிறார்…
டைரக்டர் ரத்தினசிவாவின் ‘வாடீல்’ ட்ரெய்லர் பார்த்துப் பிடித்துப் போய் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு படத்தில் நடித்தேன். இந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று என்னைச்சுற்றி ஒரு கட்டம் போட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஒரே மாதிரி நடித்தால் எனக்கே போரடித்து விடும். பார்க்கிறவர்களுக்கும் போரடித்து விடும். படம் நன்றாக இருந்தால் பாராட்டுவார்கள். இல்லையென்றால் கழுவி கழுவி ஊற்றுவார்கள். இந்தப்படம் ஒரு மாஸ் படமாக உருவாகி யுள்ளது. இப்படி ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கும் போது செமயா இருந்தது. ஜாலியாக இருந்தது. அதில் ஒரு போதை இருந்தது ‘தர்மதுரை’யும் ‘ஆண்டவன் கட்டளை’யும் கூட கமர்ஷியல் படங்கள் தான்.
என் எல்லா சினிமாவை ஒரு அனுபவமாக மட்டுமே பார்க்கிறேன். நாளைக்கு எனக்கும் அசை போட அனுபவம் ஒன்று வேண்டாமா? ‘றெக்க’ படத்தின் பாடல் காட்சியில் சிவகார்த்திகேயனின் படத்தைக் காட்டியிருக்கிறோம். எம்.ஜி. ஆர், சிவாஜி ரஜினி, கமல், விஜய், அஜீத் எல்லாரையும் காட்டி விட்டார்கள். அதனால் அது வேண்டாம் என்று தான் என் சமகாலக் கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவது போல காட்சியை வைக்கச் சொன்னேன். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
என்றவரிடம் ரெமோ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் படத்தோட றெக்க படமும் மோதுகிற அளவுக்கு விஷயங்கள் இருக்கா? என்றார் ஒரு நிருபர்.
”ரெமோ” இதைவிட நல்லா ஓடட்டும், சந்தோஷம் தான். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ”ரெமோ” மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். அதேமாதிரி இந்தப்படமும் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தோட ட்ரெய்லர் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. எனக்கே அந்தப்படத்தை பார்க்கணும் போல ஆசையாயிருக்கு. அதனால அந்தப்படம் நல்லா இருக்குமா? என்னோட படம் நல்லா இருக்குமாங்கிற கம்பேர் பண்ணவே வேணாம். அந்தப்படம் நல்லாயிருக்கு. நல்லா ஓடணும், என் படமும் நல்லா வந்திருக்கு நல்லா ஓடணும். 10 நாட்கள் ஹாலிடேஸ் இருக்கு. அதுக்கு ஒருபடம் பத்தாது. அதனால என்னோட ”றெக்க” படத்தையும் பாருங்க” என்றார் விஜய் சேதுபதி.
இந்த நல்ல மனசுக்கே ‘றெக்க’ நல்லா ஓடட்டும்!