மணமக்களை வாழ்த்த வரிசையில் நின்றார்! : விஜய்யின் எளிமையைப் பார்த்து பெருமைப்படும் ஒளிப்பதிவாளர்

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சங்கத்தின் செயலாளர், மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்கிற இரண்டு முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் என்பதால் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் திருமண நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய்யும் வந்திருந்தார். வழக்கமாக விஜய் போன்ற பிரபல நடிகர்கள் என்றால் அவர்கள் மணமக்களை மேடையேறி வாழ்த்த அதற்கென்று உள்ள தனி வழியில் தான் செல்லுவார்கள். ஆனால் நேற்று நடிகர் விஜய் அப்படிச் செல்லவில்லை. மாறாக எல்லோரும் மேடைக்கு செல்லும் வரிசையிலேயே அவரும் நின்றார்.
ஒவ்வொருவராக மணமக்களை வாழ்த்த நேரம் எடுத்தாலும் பொறுமையாக வரிசையில் நின்று தன் முறை வந்தவுடன் மேடையில் ஏறி விஷாலுடன் கை குழுக்கி அவருடைய தங்கை மற்றும் தங்கை மாப்பிள்ளையை வாழ்த்தினார்.
அவருடைய இந்த எளிமையைக் கண்ட நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ”மனித நேயம் நிறைந்த தளபதி, வரிசையில் நின்று தான் வாழ்த்துவோம் என்கின்ற தன்னடக்கத்தைப் பார்த்து பெருமிதப்படுகிறேன், இப்படிப்பட்ட நல்ல மனிதருடைய படத்தில் நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியதிலும் கர்வம் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
விஜய்யின் ‘புலி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் நட்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.