வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட விவேக்! – இதெல்லாம் தேவையா பாஸ்?
மாணவர்களுக்கு அறிவுரை என்ற பெயரில் ட்வீட் ஒன்றைப் போட்டு விட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்.
”கோடை விடுமுறையில் பெண் பிள்ளைகள் தாயிடம் சமையல் கற்றுக் கொள்ளுமாறும், ஆண் பிள்ளைகள் தந்தை வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவர் குடும்பத்திற்காக எப்படி உழைக்கிறார் என்பதை பார்க்குமாறும் நடிகர் விவேக் ட்வீட் ஒன்றைப் போட்டிருந்தார்.
அவருடைய இந்த ட்வீட்டைப் பார்த்ததும் கொந்தளித்த சிலர் ”அது என்ன பெண்கள் என்றால் சமையல் அறை தானா?” என்றும் இது ஒரு ஆணாதிக்கச் சிந்தனை என்றும் எதிர்வினையாற்றினர்.
தான் போட்ட ஒரு ட்வீட்டால் ஏற்பட்ட சர்ச்சை சமூக வலைத் தளங்களில் கிளம்பியதைப் பார்த்த விவேக் ”நான் எல்லா நாட்களையும் சொல்லவில்லை. இந்த விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டு கூறி இருக்கிறேன். மதிப்பு மிகு பெற்றோர்கள் புரிந்து கொள்வர். அவசரப் பட்டு எதிர்மறை, மற்றும் கொச்சை விமர்சனம் வைப்போரையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவம் அவர்கள் புரிதல் அவ்வளவே.”
”தன் பொருட்டு அணி பிரித்து சர்ச்சை செய்தல் வேண்டாம். அவரவர் கருத்து அவரவர்க்கு. ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதமானவர்; அன்பு மயமானவர். நான் நேசிக்கும் மாணவச் செல்வங்களுக்கு என் மாலை வணக்கங்கள். ஏலே டோண்ட் ஒர்ரி; பீ ஹேப்பி!!!!” என்று தனக்கே உரிய பாணியில் பதில் கொடுத்திருக்கிறார்.
பிரபலம் கருத்து சொன்னாலே பிரச்சனை தான் போல..? இதெல்லாம் தேவையா பாஸ்?