திருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவை நடிக்க விடாமல் தடுத்தது யார்? – வெளியானது ரகசியம்
இது பாலாவின் படமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு எளிமையான கதையோடு தனக்கே உரிய குரூரம், வன்மம் இல்லாத படமாக ‘நாச்சியார்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் பாலா.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பை பலரும் புகழ்ந்து வரும் வேளையில் அவரது மாமனாரும், நடிகருமான சிவகுமார் இயக்குநர் பாலாவை நேரில் சந்தித்து ‘நாச்சியார்’ படத்தைப் பாராட்டி பூங்கொத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
”பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப் பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு பேலன்ஸ்டு திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் கம் பேக்கை வாழ்த்தி வரவேற்போம்.
ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்கக் கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்து விட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ… ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்… அடடா…
நாச்சியார் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தை தான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா…)
கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்….” என்று பாராட்டியிருக்கிறார் சிவகுமார்.
சூர்யாவை திருமணம் செய்த பிறகு சுமார் 8 வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் நடிப்புக்கு முழுமையாக முழுக்கு போட்டிருந்தார் ஜோதிகா. அதற்கு அவரது மாமனார் சிவகுமார் தான் காரணம் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாச்சியார் படத்தைப் பாராட்டி சிவகுமார் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை மூலம் சூர்யா தான் ஜோதிகாவின் நடிப்புக்கு தடை போட்டிருக்கிறார் என்கிற உண்மை வெளியாகியிருக்கிறது.