”கஜினிகாந்தை குடும்பத்தோடு பார்க்கலாம்” – அடித்துச் சொல்லும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ டைரக்டர்!

Get real time updates directly on you device, subscribe now.

‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டா ‘ஏ’ சர்ட்டிபிகேட் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

இந்த படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பியது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் ‘கஜினிகாந்த்’.

ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படமும் அதே ஏ சர்ட்டிபிகேட் படம் தானா? என்றால் அதுதான் இல்லை. இது எல்லோரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சர்ட்டிபிகேட் படம் என்று இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஆகஸ்ட் 3-ம் தேதி ரிலீசாகப் போகும் இந்தப் படம் பற்றி அவரிடம் மேலும் கேட்டபோது, ”பலே பலே மஹாதிவாய் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். படத்துக்காக ஆர்யா கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. நாயகி சாயிஷாவைப் பொருத்தவரை, இந்த படத்தில் அவர் தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை கேட்பார். அதை படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.

Related Posts
1 of 10

என்னுடைய முதல் இரண்டு படங்களும் அடல்ட் ஹாரர் காமெடி படங்கள். குடும்பத்துடன் பார்க்க முடியுமா? என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்களை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்க முடியும். அவர்கள் அந்த படங்களை யாருடன் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். இதை தெரிந்தவர்கள் யாரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள்.

ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனென்றால் இந்தப் படத்தில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.

ஒரு குடும்பத்தினர் தங்கள் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை தேர்வு செய்வோம் என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் சொல்லியிருக்கிறார்களாம்.