என் தலைமை ஆசிரியர் இசைஞானி இளையராஜா தான்! – ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ‘இளையராஜா 75’ பிரம்மாண்ட விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ”என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்று கொண்டேன்.
பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்து இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான்.
நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுகள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இளையராஜா பேசும்போது, ”ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அப்பாவிடம் இருந்ததை விட என்னுடன் இருந்த நேரம் தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் பணியாற்றியிருக்கிறார்” என்றார்.
நிகழ்ச்சியில் ஹைலைட்டாக, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இசைஞானி இளையராஜா பாடினார்.