தோற்றத்தை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆத்மிகா!

Get real time updates directly on you device, subscribe now.

மூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு ரசிகர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை. யாரையெல்லாம் கேலி, கிண்டல் செய்ய நினைக்கிறார்களோ? அவர்கள் அத்தனை பேரையும் போலியான முகவரியிலிருந்து கேலி, கிண்டல் செய்வது வாடிக்கையாகி விட்டது.

இது சில நேரங்களில் பிரபலங்களின் மனசு வருத்தப்படும் அளவுக்கும் போய்விடுவதுண்டு. அப்படித்தான் ரசிகர்கள் கேலி, கிண்டலுக்கு ஆளான நடிகை ஆத்மிகா தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழில் ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, ‘நரகாசூரன்’, ‘காட்டேரி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும் நடித்து வருகிறார்.

மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மீம்ஸ் ஒன்றை வெளியிட்ட நெட்டிசன்கள் வடிவேலு, விவேக், விக்ரம் ஆகியோர் பெண் கெட்டப்பின் நடித்த புகைப்படங்களை அடுக்கி அதில் ஆத்மிகாவின் புகைப்படத்தையும் இணைத்து ”உலக மகளிர் தின வாழ்த்துகள்” என்று புகைப்படம் ஒன்றை வைரலாக்கினர். அதாவது யாத்மிகா ஆண்மாதிரியும் இல்லை, பெண் மாதிரியும் இல்லை என்ற பொருள்பட அந்த புகைப்படத்தை கிரியேட் செய்திருந்தனர்.

இதைப் பார்த்த நடிகை ஆத்மிகா உடனே கொதித்தெழவில்லை. மாறாக புகைப்படத்தை வெளியிட்டவர்கள் மண்டையில் ஏறும்படி ”இத்தகைய ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிட்டதற்கு முதலில் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவதாக, இந்தப் பதில் உங்களுக்காக மட்டுமல்ல உங்களைப் போன்ற மனநிலை உள்ள எல்லோருக்கும் தான்.

”நீங்களாகட்டும் அல்லது யாராவாகட்டும் ஒரு பெண்ணின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை யாரும் விளக்க முடியாது. உயரமா குட்டையா, வெள்ளையா கறுப்பா, குண்டா, ஒல்லியா, அசிங்கமா, அழகா என்பதை நீங்கள் தீர்மானிக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தனித்துவமாக அவர்கள் வழியில் அழகானவர்களே.

நாங்கள் ஆண்களைத் தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்வதில்லை, அவர்கள் எப்படி எங்களை மதிக்கிறார்கள், நடத்துகிறார்கள் என்பதை வைத்தே முடிவெடுக்கிறோம். காரணம் அவர்களது தனித்துவத்துக்காகவே நாங்கள் ஆண்களை மதிக்கிறோம். கடவுள் எங்களுக்கு இதைக் கொடுத்துள்ளார். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைய எங்களுக்குத் தெரியும். உங்கள் தாயார், சகோதரிகள் அல்லது உங்களுடன் தொடர்புடைய எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எப்படியிருக்கிறார்களோ அதற்காக மதிப்புக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதுவே கஸ்தூரியா இருந்திருந்தா என்னவாகியிருக்கும்?