டிவி சீரியலைப் பார்த்து ‘நீயா 2’ படத்தை எடுத்த இயக்குனர்!
இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு ஆளே மாறி விட்டார் நடிகர் ஜெய். முன்பெல்லாம் நிருபர்கள் என்றாலே தெறித்து ஓடுபவர் தற்போது தான் நடிக்கின்ற படங்களின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு தைரியமாக வர ஆரம்பித்திருக்கிறார்.
அப்படித்தான் சமீபத்தில் நடந்த ‘நீயா 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு வந்த ஜெய் ”லேட்ட வர்றேன்னு நெனைச்சுக்காதீங்க. இன்னொரு படத்தோட ஷூட்டிங் ஏ.வி.எம்.ல நடந்துக்கிட்டு இருக்கு. அவங்ககிட்ட அனுமதி கேட்டுட்டு இங்க வந்திருக்கேன். படம் ரிலீசான பிறகு நெறைய பேசுகிறேன்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
ஜெய் சுருக்கமாகப் பேசினாலும் படத்தின் இயக்குனர் அப்படி சுருங்கப் பேசவில்லை. கால் மணி நேரம் தாண்டியும் ‘நெறையப்’ பேசினார்…
அதிலிருந்து சில இங்கே…
’’பாலுமகேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ் பதிப்பு தான் ‘எத்தன்’. ஒரு இயக்குநருக்கு படம் என்பது எந்தளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதே போல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பாம்புக்கு படம் பண்ணனும் என்று தயாரிப்பாளர் என்னிடம் கூறினார். பாம்புக்கு எப்படி படம் பண்ணுவது என்று யோசிக்கும் போதுதான் தொலைக்காட்சியில் ‘நாகினி’ தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. பிறகு தான் இந்த கதை தோன்றியது.
‘நீயா’ படத்தில் நிஜ பாம்பை தான் காட்டியிருப்பார்கள். அதேபோல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்து கொள்ள பாங்காக்கிற்கு சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள். ஒரு நண்பரிடம் பாம்பு படத்தை காட்டினேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜ பாம்பு இப்படி இருக்காது என்றார். பாங்காக்கில் இருக்கும் பாம்பின் படம் தான் இது என்றேன். ஆகையால் இப்படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பை தான் காட்டியிருக்கிறோம்.
இப்படத்தில் நிஜ வில்லன் மழை தான். ஆகையால், படப்பிடிப்பை மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் நடத்தினோம். வரலட்சுமிக்கு கஷ்டமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘எத்தன்’ முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்தது. இப்படம் ரொமான்டிக் திரில்லராக இருக்கும். இப்படம் பெரியதாக அமைய காரணம் ஜெய், கேத்தரின் தெரசா, வரலக்ஷ்மி, ராய் லக்ஷ்மி தான். அவர்களை கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி” என்றார்.
தயாரிப்பாளரை மறக்காம இருக்கீங்களே… சபாஷ்!