புரட்சித் தலைவரின் கொள்கையோடு வந்த புலமைப்பித்தனின் கலை வாரிசு!

என்னதான் அறிமுகமாகும் எல்லா வாரிசு நடிகர்களும் சினிமாவில் ஜெயிக்க முடிவதில்லை என்றாலும் சரியான நேரமும், அதிர்ஷ்டமும் அமையும் போது திறமையான வாரிசு நடிகர்களுக்கு வந்த வேகத்திலேயே சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைத்து விடுகிறது.
இதோ இன்னொரு வாரிசு நடிகராக அறிமுகமாகியிருக்கிறார் திலீபன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து பின்னாளில் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வர் ஆன பிறகும்அவரது ஆட்சியில் அரசவை, மேலவை என்று அரசுப் பதவிகளை வகித்தவர் பாடலாசியர் புலமைப்பித்தன்.
அவருடைய பேரன் தான் இந்த திலீபன்.
இயல்பாகவே பைக் ரேஸரான திலீபனுக்குள்ளும் சினிமா ஆசை ஒரு ஓரத்தில் இருந்து கொண்டிருக்க சரியான சந்தர்ப்பத்தற்காக காத்திருந்தார். பல பைக் ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்று பெற்று பரிசுகளை வென்றவர் இன்றுவெளியான பள்ளிக்கூடம் போகாமலே படத்தில் வில்லனாகி விட்டார்.
“பைக் ரேஸ்ல வீலிங் செய்தபடியே…. அதாவது பின் வீலில் மட்டுமே பைக்கை பத்து கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறேன். நிறைய மெடல்களையும் வாங்கிக் குவித்திருக்கிறேன்.
ரிஸ்க்கான அந்த வீலிங் விளையாட்டில் நான் ஈடுபடுறது என்னோட தாத்தாவுக்கு புடிக்கல. அவர் சொன்னதால அந்த மோகத்திலிருந்துஎன்னை விடுவித்துக் கொண்டேன். அதன்பிறகு என்னோட கனவு சினிமாவாகத்தான் இருந்தது. லண்டனி ஆக்டிங் கோர்ஸை முடித்த பிறகும் கூட இங்கு வந்து நடிகர் ஜெயராம் அங்கிளிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். முறையாக பயிற்சி எடுத்த பிறகே சினிமாவுக்கு வந்தேன் என்று சொல்லும் திலீபன் வரும்போதே ஒரு கொள்கையுடன் தான் சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.
அதென்ன கொள்கை?
சினிமா ரசிகர்களுக்கு ஒருபோதும் தவறான வழிகளைக் காட்ட மாட்டேன். அதனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கையான சிகரெட் புகைப்பது, மது அருந்துவது மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டேன்..!” என்ற கொள்கையோடு நடிக்க முடிவெடுத்திருக்கிறார்திலீபன். பேரனின் இந்த முடிவைக் கேட்டதும் ஆரத் தழுவி ஆசி வழங்கி சினிமாவுக்கு அனுமதித்திருக்கிறார் தாத்தா புலமைப்பித்தன்.
‘பள்ளிக்கூடம் போகாமலே’ படத்தைத் தொடர்ந்து ‘எவன்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார் திலீபன். இதில் அவருடைய தாத்த புலமைப்பித்தனும் பாடல் எழுதியிருக்கிறாராம்.
என்னை சினிமாவுக்கு அனுமதித்து என் படத்தில் அவர் பாட்டெழுதியதே எனக்கு அவரது ஆசிகள்தான்..!” என்கிறார் திலீபன்.