அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!

Get real time updates directly on you device, subscribe now.

அரசியல் தலைவர்களின் பாராட்டு பெற்ற வகையிலும் வாக்காளர்களின் மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கிடும் வகையிலும் ‘பிச்சை’ என்கிற பெயரில் ஒரு குறும்படம் உருவாகியுள்ளது.
பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் குறும்படத்தை சி .மகேந்திரன் மற்றும் ஸ்ரீ ஜெகம் இயக்கியுள்ளனர்.
விப்ஜியார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.ஸ்ரீராம் ஸ்டுடியோஸ் அசோக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிருஷ்டி எஸ். கெளதம் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜெய்கிஷன் இசையமைத்துள்ளார்.

‘பிச்சை’ குறும்படத்தில் பிரதானமாக வரும் பிச்சைக்காரன் பாத்திரத்தில் நடிகர் விப்ஜியார் நடித்துள்ளார்.
இவர் 2024 வெளியான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘ என்ற சிறுவர்களுக்கான படத்தில் பிரதான வில்லன் வேடம் ஏற்று நடித்தவர். சிங்கம் புலி கதை நாயகனாக நடிக்கும் ‘தீமை அறியா தீக்குச்சி’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்போது ‘வெற்றி நாயகன்’ உள்ளிட்ட இரண்டு புதிய படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா மீதுள்ள ஆர்வத்தில் இந்தக் குறும்படத்தில் அவர் நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார்.

மேலும் ஜெ .ஜெகதீஸ்வரி சிறுமி சம்ரிதா, ஆர்.சி. கண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இது தேர்தல் காலம் .தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் தவறான போக்கு நடைமுறைப்படுத்தும் காலமாகவும் மாறி வருகிறது. மக்களும் சற்றும் குற்ற உணர்வும் கூச்சமுமின்றி வாக்குக்குக் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு யாருக்காவது வாக்களிக்கிறார்கள்.விழிப்புணர்வில்லாததாலும் சிந்திக்க மறப்பதாலும் வாக்களிப்பதற்காக வாங்கும் 2000 அல்லது 3000 ரூபாய்க்காக ஐந்தாண்டுகள் விலை போகும் ஒரு பாதகத்தை மக்கள் செய்கிறார்கள். சிந்தித்துப் பார்த்தால் அவர்களிடம் கொடுக்கப்படுவது அன்பளிப்பு அல்ல பிச்சை என்பது விளங்கும்.இந்த இழிவான போக்குக்கு எதிராக வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் இந்தக் குறும்படம் உருவாகியுள்ளது. ‘கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக்கூடாது’ என்ற விழிப்புணர்வுக் கருத்தை இந்தக் குறும்படம் வலியுறுத்துகிறது.

இந்தக் குறும்படத்தைத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் வெளியிட்டதுடன்,
” இது ஒரு அருமையான கருத்துள்ள குறும்படம். அனைத்து வாக்காளர்களுக்கும் இந்தப் படம் போய்ச் சேர வேண்டும்” என்று பாராட்டி வாழ்த்தினார் .தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான கே. ஏ. செங்கோட்டையன் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதுடன், ” இது நல்ல கருத்துள்ள படம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.என்று கூறியுள்ளார் .

இப்படிப் படம் பார்த்து விட்டுப் பலரும் பாராட்டியுள்ளனர்.வாக்களிப்பதற்கு முன்பு இந்தப் படத்தை பார்த்து விட்டுச் சென்றால் ஒரு கணம் அவர்களிடம் சிந்தனை மாற்றம் ஏற்படும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள்.