நடிகர் சங்க தேர்தல் : துணைத் தலைவராக போட்டியிடுகிறார் சிம்பு!
நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தற்போதையை தலைவர் சரத்குமார் அணியை எதிர்த்து விஷால் தலைமையிலான அணியினர் போட்டியிடுகின்றனர்.
இரு அணியினரும் உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். இந்த சூழலில் இன்று சரத்குமார் தலைமையிலான அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினர்.
அதில் கலந்து கொண்ட சரத்குமார் பேசும்போது : விஷால் அணியினர் என் மீது அவதூறை பரப்பி வருகிறார்கள். இந்த அவதூறு பரப்புதல் தொடர்ந்தால் 15 நாட்களுக்குள் முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன். நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்குத் தான் கஷ்டம்.
நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது மன வேதனை அளிக்கிறது. நடிகர் சங்க இடத்தில், அடுக்குமாடி வணிக வளாகம் 2013ல் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டிருந்தால் பல கோடி வருவாய் வந்து நலிந்த கலைஞர்கள் பலன் அடைந்திருப்பர். நடிகர் சங்க தேர்தல் நல்ல முறையில் நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
சந்திப்பில் பேசிய சிம்பு சரத்குமார் அணி தான் நடிகர்களுக்காக பாடுபடுகிறது அதனால் நான் அந்த அணி சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நடிகர் சங்க தேர்தலில் உண்மை தான் வெற்றி பெறும் என்றார்.