100 தியேட்டர்கள்ல படத்தை ரிலீஸ் பண்ணி 4 நாட்கள் ஓட்றாங்க..! : சிந்திக்க வைத்த சின்ன கலைவாணர்
‘திருநெல்வேலி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் உதயா அதன் பிறகு ‘கலகலப்பு’, ‘உன்னை கண் தேடுதே’, ‘பூவா தலையா’, ‘ரா ரா’ என அரை டஜன் படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்தார்.
இருந்தாலும் இன்றுவரை அவரால் ஒரு முன்னணி ஹீரோ இடத்தை பிடிக்க முடியவில்லை. தன் முயற்சியை கைவிடாத அவர் லேட்டஸ்ட்டாக நடித்திருக்கும் படம் தான் ‘ஆவிகுமார்’.
சில தினங்களுக்கு முன்பு நடந்த இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் ஹீரோ உதயாவை வாழ்த்த வந்த காமெடி நடிகர் விவேக் சிரிக்கவும், சிந்திக்கவும் விதமாகப் பேசினார்.
அப்போது அவர் சிறுபட தயாரிப்பாளர்கள் படும் வேதனையை எடுத்துச் சொல்லி இதற்கு ஒரு தீர்வை தயாரிப்பாளர் சங்கம் முன் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
விவேக் பேசியதாவது :
‘‘இப்பெல்லாம் சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டரே கிடைக்கறதில்ல. அப்படி கிடைச்சாலும் பதினொரு மணி ஷோவுல குடும்ப படத்தை போட்றாங்க. அந்த நேரத்துல பெண்களெல்லாம் சமையல் வேலைகள்ல மூழ்கியிருப்பாங்க. அவங்க வரலேன்னா எப்படி குடும்ப படங்கள் ஓடும்?’
‘நாடோடி மன்னன்’ படம் ரிலீசானப்போ ‘இந்தப்படம் ஓடினால் நான் மன்னன்’ ‘இல்லேன்னா நான் நாடோடி’ என்றார் எம்.ஜி.ஆர். அந்தப்படம் மிகப்பெரிய அளவுல ஹிட்டாச்சு.முன்பெல்லாம் தினமும் 4 ஷோக்கள் போட்டு 100 நாட்கள் படங்கள் ஓடிச்சு. இப்பெல்லாம் 100 தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணி வெறும் 4 நாட்கள் தான் படம் தியேட்டர்ல ஓடுது…
நல்ல நல்ல பட்ஜெட் படங்கள் எல்லாம் ஓடுறதுக்காக சூழலே இல்லாமப்போச்சு. ஒருபடம் நல்லா இருக்கா? இல்லையா?ங்கிற கருத்த்ய் மக்கள்கிட்ட போய் சேர்றதுக்கு படத்தை தியேட்டர்ல இருந்து தூக்கிடுறாங்க.
ஒரு கத்தரிக்காய் வியாபாரம் பண்றவங்க கூட அதை ஒரு பத்துநாள் வெச்சு தண்ணி தெளிச்சு தண்ணி தெளிச்சு விற்பார்கள். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அந்த 10 நாட்கள் கூட கிடைப்பதில்லை. கத்தரிக்கை வியாபாரம் பண்றவங்களை விட தயாரிப்பாளர்கள் நெலைமை மோசமாயிடுச்சு… இந்த நிலை கண்டிப்பா மாறணும். இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் நடிகர் விவேக்.