“கோட்” தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அலையை உருவாக்கும்”-கோமல் சர்மா!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் செலக்ட்டிவாக படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் சில நடிகைகள் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் திரையுலகில் நீண்ட நாட்கள் நிலைத்து நின்று பயணிப்பார்கள். அப்படி இருக்கும் வெகுசில நடிகைகளில் நடிகை கோமல் சர்மா தவிர்க்க முடியாத ஒருவர். தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா ‘அமைதிப்படை-2’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘ஷாட் பூட் த்ரீ’, ‘பப்ளிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் ‘இட்டிமானி’, ‘மரக்கார்’ மற்றும் பாலிவுட்டில் ‘ஹங்கமா-2’ படங்களில் நடித்ததன் மூலம் ஒரு பான் இந்திய நடிகையாகவே மாறியுள்ளார் கோமல் சர்மா.

வாய்ப்புகளை தேடி செல்வதை விட தனது நடிப்பிற்காக தன்னை தேடி வரும் நல்ல படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடித்து வரும் கோமல் சர்மாவிற்கு இந்த வருடம் மட்டுமே தமிழிலும் மலையாளத்திலும் கிட்டத்தட்ட நான்கு படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. நான்குமே பெரிய படங்கள். சமீபத்தில் தனக்கு கோல்டன் விசா கிடைத்தது குறித்தும் தனது திரையுலக பயணத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்கள் குறித்தும் உற்சாகமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கோமல் சர்மா.

“காத்திருப்பு எப்போதுமே வீண் போவது இல்லை என்பது போல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதற்காக தேடி வந்த வாய்ப்பை பிரியதர்ஷன் சாரின் டைரக்சனில் ஹிந்தியில் உருவான ‘ஹங்கமா-2’வில் நடித்து வந்ததால் ஏற்க முடியாமல் போனது. ஆனால் இப்போது அவருடைய டைரக்சனில் ‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அவருடன் ‘ஷாட் பூட் த்ரீ’ படத்தில் நடித்தபோது நன்கு பழகி இருக்கிறேன். அவருக்குள் ஒரு அற்புதமான நடிகரும் ஒளிந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் திறமையான தொழில்நுட்பங்களை, புதுப்புது கண்டுபிடிப்புகளை சினிமாவில் புகுத்த வேண்டும் என்கிற வேட்கையும் அவரிடம் இருக்கிறது. ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பில் அதை அவர் செயல்படுத்தியதை நேரடியாகவே பார்க்க முடிந்தது.

‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது. அவர் மட்டுமல்ல பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என மற்ற நடிகர்களுடனும் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இந்த ‘கோட்’ படத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. விஜய்யை ‘பவர் ஆப் தி டேலண்ட்’ என்று சொன்னால் சரியாக இருக்கும்.. நடிப்பில் மேஜிக்கை நிகழ்த்த கூடிய ஒரு அற்புதமான நடிகர். ‘கோட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அலையை உருவாக்கும் படமாகவும் இருக்கும்.