அடுத்தடுத்து குவியும் புகார்கள் – சாய் பல்லவிக்கு நேரம் சரியில்லையோ?
‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி.
அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடி விட்டனர். அந்தப் படம் கொடுத்த வெற்றியால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர் தமிழில், ‘கரு’, சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’, தனுஷூடன் ‘மாரி 2’ என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
எந்தளவுக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றனவோ அதேபோல அவர் மீது புகார்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
சில வாரங்களுக்கு முன்பு ”படப்பிடிப்பில் அவரது நடவடிக்கைகள் சரியானதாக இல்லை. எல்லோரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்” என்று சாய் பல்லவி மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார் சாய் பல்லவி நடித்த தெலுங்கு படமான ‘பிடா’ படத்தின் ஹீரோ சவுரியா.
அந்த சம்பவத்துக்கு முன்பாக, நடிகர் நானியுடன் சாய் பல்லவி நடித்த ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ படப்பிடிப்பிலும் இதுபோல பிரச்னை ஏற்பட்டது. படப்பிடிப்பில் நானியும், சாய் பல்லவியும் தகராறில் ஈடுபட்டு இருவருமே படப்பிடிப்பில் இருந்து வெளியேறி கூத்தெல்லாம் கூட நடந்தது. தற்போது தமிழ்சினிமாவிலும் சாய் பல்லவியின் பெயர் அநியாயத்துக்கு டேமேஜ் ஆக ஆரம்பித்திருக்கிறது!
இயக்குநர் மிஷ்கின், சாந்தனுவை வைத்து இயக்கப்போகும் படத்தில் நாயகியாக நடிப்பதற்காக சாய் பல்லவியை நடிக்க வைக்க கேட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால் அவரோ மூன்று கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று கூலாகச் சொல்லியிருக்கிறார்.
உங்க நடிப்புக்கு 3 கோடியெல்லாம் ரொம்ப ஜாஸ்தி என்று மிஸ்கின் தரப்பில் பதிலடி கொடுத்தபோது சாந்தனுவுடன் நடிக்க விருப்பம் இல்லாததாலேயே தான் அவ்வளவு சம்பளம் கேட்டதாக பல்டியடித்திருக்கிறார் சாய் பல்லவி.
அதுமட்டுமல்ல, எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதுப்படத்திலும் சாய் பல்லவியைத்தான் கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள். ஆனால் இப்போது நயன்தாராவை கமிட் செய்து விட்டார்கள். இந்த மாற்றத்துக்கும் சாய் பல்லவியின் மிக மோசமான அணுகுமுறையே காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!
டீச்சருக்கே ஒரு டீச்சர் பாடம் எடுக்கணும் போல!