‘கூத்துப்பட்டறை’க்கு மட்டும் போயிடாதே… : மகனுக்கு தம்பி ராமையா கொடுத்த அட்வைஸ்
காமெடி, குணச்சித்திர கேரக்டர்களில் தனக்கென்று தனி பாணியில் கலக்கிக் கொண்டிருக்கும் தம்பி ராமையா தற்போது தனது மகன் உமாபதியை ஹீரோவாக களமிறக்கி விட்டிருக்கிறார்.
அவர் நடிக்கும் இப்படத்துக்கு ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ என்று வித்தியாசமான டைட்டில் வைத்திருக்கிறார்கள். சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ரமேஷ்குமார் தயாரித்திருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரேஷ்மா ரத்தோர் இப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், மனோபாலா புதுமுக நடிகர் தயாளன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
டி. இமான் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். ‘அட்டகத்தி’ மற்றும் ‘குக்கூ’ படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கே. வர்மா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன், அது இது எது என சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் பணிபுரிந்திருக்கிறார்.
“நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்குப் போட்டாலும் அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேற ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம். இதைத்தான் படத்தின் கதைக்கருவாக வைத்து விறுவறுப்பும், நகைச்சுவையும் கலந்து தயாரித்திருக்கிறார்கள்.
மேலும் எதற்காக படத்துக்கு இப்படி ஒரு வித்தியாசமான டைட்டில் என்பதற்கான காரணத்தையும் கிளைமாக்ஸில் வைத்திருக்கிறார்கள்.
விரைவில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதை தொடர்ந்து இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.!
இந்தப்பட வாய்ப்பு வந்ததும் விஷயத்தை அப்பாக்கிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டு வாழ்த்தினார். அப்போ இதுக்காக நான் கூத்துப்பட்டறை, அனுபம்கெர் ஆக்டிங் இன்ஸ்ட்டியூட் இங்கெல்லாம் போய் ஆக்டிக் கத்துக்கவான்னு அப்பாக்கிட்ட கேட்டேன். அங்க மட்டும் போயிடாதே…ன்னு அப்பா சொன்னார். அதுக்கப்புறம் இந்தப் படத்தோட இயக்குநர் படத்துக்காக ஒத்திக்கைக்கு கூப்பிட்டப்போ அதுக்கு மட்டும் போ போதும்னார் என்கிறார் ஹீரோ உமாபதி.