‘சாமி 2’ வில் த்ரிஷா இல்லை – புது மாமி ஐஸ்வர்யா ராஜேஷ்!
2003-ம் ஆண்டு ரிலீசான ‘சாமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘சாமி ஸ்கொயர்’ படம் தயாராகி வருகிறது. விக்ரம் ஹீரோவாக நடிக்க, ஹரி இயக்கி வருகிறார்.
இந்த இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா தான் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படத்தில் தனது கேரக்டர் சிறப்பாக இல்லை என்றும், சிறிது நேரமே தனது காட்சிகளை படத்தில் வைத்துள்ளனர் என்றும் குறை கூறி நடிக்க மறுத்தார் த்ரிஷா, அதோடு வாங்கிய சம்பள அட்வாஸ் பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டு வெளியேறினார்.
இதனால் த்ரிஷா கேரக்டரில் இந்த இரண்டாம் பாகத்தில் யார் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்தது. தற்போது த்ரிஷாவுக்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புது மாமியாக ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இணைந்திருக்கிறார்.
‘செக்க சிவந்த வானம்’, ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட பல படங்களில், முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புத் திறமையை நன்றாகத் தெரிந்து கொண்ட இயக்குநர் ஹரி ‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் திரிஷா நடித்த கேரக்டரில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்.
இயக்குநர் ஹரி, இவருக்கும் சீயான் விக்ரமிற்கும் இடையேயான காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தற்போது பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் முகாமிட்டு படமாக்கி வருகின்றார்.
இந்த படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு, பாபி சிம்ஹா,சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீடும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை தமீன் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.