அஜித்திடம் அடுத்தடுத்த மாற்றம் : ரொமான்ஸ் விஷயத்திலும் புது முடிவு!

வழக்கமான சினிமா நடிகராக இல்லாமல் தனக்கென்று தனி கொள்கைகள், கோட்பாடுகளையெல்லாம் வைத்துக் கொண்டு படங்களில் தலை காட்டி வருகிறார் அஜித்.
சொந்தம், நெருங்கிய வட்டம் தவிர்த்து வேறு எந்த விழாக்களிலும் அவரை யாரும் பார்த்திருக்க முடியாது. அவ்வப்போது ஏதாவது வெளிநாட்டுக்குப் போனால் போகிற போதோ? அல்லது திரும்பி வருகிற போதோ? சென்னை ஏர்போர்ட்டில் பார்க்கலாம். அதைத் தவிர்த்து அஜித்தை அவரது வீட்டார்களே நெருங்கிப் பார்த்து நாட்கள் பல ஆகியிருக்கும்.
அந்தளவுக்கு வெளிநாடு விட்டால் வீடு, வீடு விட்டால் வெளிநாடு என்றாகிப் போன அஜித் இப்போது எடுத்திருக்கும் ஒரு புது கொள்கை முடிவைக் கேட்டால் அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
அவரை விட இருபது வயது மூத்தவர்களே தலை முடியில் நரையை வெளிப்படையாகக் காட்ட யோசித்துக் கொண்டிருக்கும் போது, அஜித் மட்டும் தைரியமாக நரை முடியோடு படங்களில் தலை காட்ட ஆரம்பித்தார். அவரின் அந்தப் புதிய தோற்றம் ரசிகர்களை ஈர்க்க அவர்களும் ”சால்ட் அண்ட் பெப்பர்” ஹேர் ஸ்டைல் என்று தங்கள் தலைமுடியையும் பட்டி டிங்கரிங் பார்த்து ஒயிட் ஆக்கி அலைந்தனர்.
அந்த ஒரு மாற்றத்தைப் போலவே இனி இன்னொரு மாற்றத்தையும் அஜித்திடம் ரசிகர்கள் பார்க்கலாம். ஆமாம், இனி தான் நடிக்கும் படங்களில் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் சீன்களில் நடிப்பதை தவிர்ப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அஜித்.
அஜித்தின் இந்த மாற்றத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்து வரும் ”ஏ.கே 57” படத்திலேயே ரசிகர்கள் பார்க்கலாம் என்கிறார்கள். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் இருந்தாலும் அவர் காதலியாக வரவில்லை. அஜித்துக்கு மனைவியாகத்தான் வருகிறார். இந்த வயசுக்கு மேல் உருகி உருகி காதலிப்பதெல்லாம் காமெடியாகி விடும் என்று அஜித் யோசித்ததன் விளைவே இப்படி ஒரு புது முடிவு என்கிறார்கள்.
அஜித்தோட இந்த முடிவை அவரோட ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்களோ? பொறுத்திருந்து தான் பார்க்கணும்.