அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்

RATING : 2.5/5

கைக்காசைப் போட்டு தங்கள் அபிமான ஹீரோவின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒவ்வொரு ரசிகனையும்  ‘ந்ந்தாப்பா… ஒரே ஒரு நிமிஷம் உன் குடும்பத்தைப் பத்தி யோசி’ என்று சொல்வது தான் இந்த ‘அட்ரா மச்சான் விசிலு.’

மதுரையைச் சேர்ந்த சிவா, செண்ட்ராயன், அருண்பாலாஜி மூவரும் பிரபல நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசனின் தீவிரமான ரசிகர்கள்!

தங்கள் அபிமான ஹீரோ படம் ரிலீசாகி விட்டால் வட்டிக்கு கடன் வாங்கியாவது போஸ்டர்களை ஒட்டுவது, கட் -அவுட்டுகளை வைப்பது, சரக்கடித்து ஜாலியாக ஊர் சுற்றுவது என மதுரை நகரையே கூத்தும், கும்மாளமுமாக்கி விடுவார்கள்.

இன்னைக்கு என்ன நாள் என்று கேட்கும் தன் காதலி நைனா சர்வாரிடம் கூட ”அட ஆமா இன்னைக்கு எங்க பவர் ஸ்டார் நடிச்ச ‘லத்திகா’ 100வது நாள்’ என்று மிர்ச்சி சிவா சொல்லுகிற அளவுக்கு மூவரும் பவர் ஸ்டார் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்.

இவர்களின் இந்த வெட்டி பந்தாவைப் பார்க்கும் இன்ஸ்பெக்டரான ராஜ்கபூர் உங்களை வெச்சு உங்க ஹீரோ கோடிகோடியா சம்பாதிக்கிறாரே? நீங்க என்னைக்காவது அவரை வெச்சு கால் காசாவது சம்பாதிச்சிருக்கீங்களா? என்று நாக்கைப் பிடுங்குகிற மாதிரி ஒரு கேள்வியைக் கேட்பதோடு அதற்கு ஐடியாவையும் கொடுக்கிறார்.

அவர் சொல்படி பவர் ஸ்டார் நடித்த புதுப்படத்தை மதுரை ஏரியாவில் வாங்கி சந்தோஷமாக விநியோகம் செய்கிறார்கள். படம் வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு போஸ்டர் காசு கூட திரும்ப வராது என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைக்க, தங்கள் அபிமான ஹீரோவை சந்தித்து நஷ்ட ஈடு கேட்க சென்னைக்கு வருகிறார்கள்.

ஹீரோவோ ரசிகர்களை திட்டி அனுப்ப, நாம் அனுஅனுவாய் ரசித்த ஹீரோ நம்மை அவமானப்படுத்தி விட்டாரே என்கிற கோபத்தில் அவருக்கு பாடம் கற்பித்து இழந்த பணத்தை எப்படி மீட்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.

வழக்கமாக மாஸ் ஹீரோக்களின் படங்களில் ரசிகர்களுக்கு ஹீரோக்கள் அறிவுரை சொல்வார்கள். இதில் அத்தனை மாஸ் ஹீரோக்களுக்கும் ரசிகர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.

மிர்ச்சி சிவாவுக்கெல்லாம் அசால்ட்டான நடிப்பு அத்துபடி. நேரில் பார்த்து பேசுவது போலவே திரையிலும் பாடி – லாங்குவேஜைக் காட்டுவது வரம்.
சிவாவின் நண்பர்களாக வரும் செண்ட்ராயன், அருண்பாலாஜி இருவர்களில் ஓவர் ஆக்டிங்கில் போரடிக்க வைக்கிறார் செண்ட்ராயன். கொறைச்சுக்கங்க செண்ட்!

சிவாவை துரத்தி துரத்தி காதலிக்கும் புதுமுக நாயகி நைனா சர்வார். பாடல் காட்சிகளில் அடடா அல்வா துண்டு இடுப்பு என்று பாடத்தூண்டும் அழகு மேனி, கொஞ்சம் தொப்பையைக் குறைத்தால் இன்னும் அரை டஜன் படங்களில் வேஷம் கட்டலாம்.

ரஜினி போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற ஹீரோவைக் கலாய்க்கும் கேரக்டரில் நடிக்கவே ஒரு தில் வேண்டும். அதில் யோசிக்காமல் நடித்திருக்கும் பவர் ஸ்டார் டயலாக்குகளைக் கூட ஒருவழியாக பேசி விடுகிறார். ஆனால் அவைகளுக்கு கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் தான் ரசிகர்களை தியேட்டரிலிருந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓட்டமெடுக்க வைத்து விடுகிறது. அதேபோல கூடவே வர்ற ஆள் காட்டி விரல் மாதிரி… படம் முழுக்க பல் காட்டி ஹீரோவா வர்றார் பவர் ஸ்டார் சீனிவாசன்! தாங்க முடியல…

மாஸ் ஹீரோவை வைத்து படமெடுக்கிறார் என்று வெளியில் பேசிக்கொண்டாலும் அந்த ஹீரோவை  வைத்து படம் இயக்க ஒரு இயக்குநர் என்னென்ன பாடுபட வேண்டியிருக்கிறது? என்பதை வெளிச்சம் போட்டு விடுகிறது வேல்முருகனின் இயக்குநர் கேரக்டர்.

பவர்ஸ்டாருக்கு மேனேஜராக வரும் சிங்கமுத்து கொஞ்சம் காட்டுக் கத்தலை குறைத்திருந்தால் காமெடி நிறைவாக இருந்திருக்கும்! அடுத்தடுத்த படங்கள்ல அதை செய்ங்க சிங்கம்!

பின்னணி இசையை விட்டு விடுங்கள், ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அப்படியே மனசை அள்ளி விடுகின்றன. அதிலும் தேவதை தேவதை பாடல் திரும்ப திரும்ப கேட்டாலும் திகட்டாத தேனிசை!

காலங்காலமான கடவுளுக்கு நிகராஜ பூஜிக்கப்படும் கதாநாயகர்களை ஒரு சாதாரண நடிகர்களாகப் பாருங்கள் என்று ரசிகர்களை யோசிக்க வைக்கிற படமாக தந்திருக்கிறார் அந்த துணிந்து படமாக்கிய இயக்குநர் திரை வண்ணனுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.  அதே சமயம் இவர் தான் அந்த ஹீரோ என்று ஈஸியாக கண்டுகொள்ளும் விதமாக ரஜினியை மட்டும் குறிவைத்து முழுப்படத்திலும்  அவரை கிழித்து தொங்க விட்டிருப்பது என்ன டைரக்டர் சார், ரஜினி மட்டும் தான் தமிழ்சினிமாவில் இப்படி இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுப்பி விடுகிறது. அதற்கான பதிலையும் இயக்குநர் திரை வண்ணன் தான் சொல்ல வேண்டும்.

அட்ரா மச்சான் விசிலு – ரசிகர்களுக்கு பாடம்!

N.R.RaghunanthanNaina SarwarPower Star SrinivasanShivaThiraivannanஅட்ரா மச்சான் விசிலு சினிமா விமர்சனம்அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்சிவாபவர் ஸ்டார்பவர் ஸ்டார் சீனிவாசன்
Comments (0)
Add Comment