அருவி – விமர்சனம்

நட்சத்திரங்கள் – அதிதி பாலன், லட்சுமி கோபால் சுவாமி, அஞ்சலி வரதன், கவிதா பாரதி மற்றும் பலர்

இசை – வேதாந்த் பரத்வாஜ் – பிந்து மாலினி

ஒளிப்பதிவு – ஷெல்லி கேலிஸ்ட்

வகை – நாடகம் – த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 13 நிமிடங்கள்

RATING – 4.2/5

சாலாப் படங்களின் நெடியில் மூச்சித் திணறிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமா ரசிகனுக்கு எப்போதாவது தான் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில நல்ல படங்கள் வந்து போகிறது. அந்த வரிசையில் இந்த அருவியும் ‘தமிழில் ஒரு உலகத்தர சினிமா’ என்கிற பெருமையோடு வந்திருக்கிறாள்.

முதலில் இப்படிப்பட்ட ஒரு தரமான சினிமாவை கொடுத்த இயக்குனர் அருண் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அத்துனை பேருக்கும் மனம் நெகிழ, பாராட்டுகளும்… வாழ்த்துகளும்…

குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டில் அப்பாவின் செல்லப் பிள்ளையாக வளர்கிறாள் ‘அருவி’யாக வரும் நாயகி அதிதி பாலன். குமரிப் பருவம் எய்ததும் ஒரு பிரச்சனை. அதன் விளைவால் அம்மா, அப்பாவுடன் ஏற்படுகிற சண்டையில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

தன்னந்தனியாக வந்த அருவிக்கு திருநங்கை அஞ்சலி வரதன் தோழியாகிறாள். அடுத்தடுத்து அருவியின் வாழ்க்கையில் வந்து போகிற மனிதர்களால் ஏற்படுகிற பிரச்சனைகளும், அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதையும் இதயம் கசியச் செய்கிற கிளைமாக்ஸோடு சொல்கிறது படம்.

50 பெண்களுக்கு ஆடிஷன் வைத்து அதில் அருவியாக தேர்வானவர் தான் நாயகி அதிதி பாலன். அடட… இம்பூட்டு யதார்த்தமான நடிப்பை நாயகிகளிடம் பார்த்து எத்தனை நாளாச்சு என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.

மொத்தக் கதையையும் இயக்குனர் அருண் பிரபு இவர் தலையில் தூக்கி வைக்க, கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல் சிந்தாமல் சிதறாமல் சுமந்திருக்கிறார் புதுமுகம் அதிதி பாலன்.

கோபம், சிரிப்பு, அழுகை, சோகம் என இருக்கிற அத்தனை உணர்வுகளையும் மிக அழகாக திரையில் காண்பிக்கிறார். தமிழ்சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்த நாயகி கிடைத்தாயிற்று. பெருமைக்குரிய பல விருதுகளும் அதிதியை தேடி வர வாழ்த்துகள்!

திரு நங்கைகள் என்றாலே குத்துப் பாட்டுக்கு ஆட வைப்பதும், அல்லது அசிங்கமான சைககளை காட்டச் சொல்வதும் தான் தமிழ்சினிமாவில் நியதி. அந்த நியதியை அநீதி லிஸ்ட்டில் சேர்த்து விட்டு படம் முழுக்க நாயகியின் தோழியாக தவிர்க்கவே முடியாத கேரக்டரில் கவனம் பெறுகிறார் திருநங்கை அஞ்சலி வரதன். கேரக்டர் நல்லதாக இருந்தாலும் முழுப்படத்திலும் எதற்காக அரவாணி என்கிற வார்த்தையை இயக்குனர் பயன்படுத்தினார் என்று தெரியவில்லை.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற ரியாலிட்டி ஷோவைத்தான் ‘சொல்வதெல்லாம் சத்யம்’ என்று பெயர் மாற்றி படத்தின் முக்கிய காட்சிகளாக்கி இருக்கிறார் இயக்குனர் அருண். ஆனால் அந்த காட்சிகள் எந்த இடத்திலும் படம் பார்க்கும் நமக்கு எரிச்சலைத் தரவில்லை. மாறாக கதையோடு ஒன்றி வருவதைப்

போல திரைக்கதை அமைத்ததோடு மட்டுமில்லாமல் அந்த டிவி சேனன் வருகிற காட்சிகள் எல்லாவற்றிலும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்.

ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் மற்றவர்களின் அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் போட்டு அசிங்கப்படுத்துகிறோமே? என்கிற கூச்ச, நாச்சமோ, இரக்கக் குணமோ இம்மியளவும் இல்லாமல் டி.ஆர்.பிக்காக என்னென்ன வேலைகளை தனியார் டிவி சேனல்கள் செய்கின்றன என்பதையும் துணிச்சலோடு தோலுரித்துக் காட்டியிருப்பது ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

அருவியின் அப்பாவாக வரும் திருநாவுக்கரவு, அம்மாவாக வரும் ஹேமா, டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் லட்சுமி கோபால்சுவாமி, நிகழ்ச்சியின் இயக்குனர் கவிதா பாரதி, அவருக்குக்கீழ் உதவி இயக்குனராக வேலை செய்யும் பிரதீப் ஆன்டணி, அந்த யூனிட்டின் அசிஸ்டென்ட் சுபாஷ், ‘ரோல்ல்ல்ல்ல்லீங் சார்…’ என்று பெருங்குரலெடுக்கும் ஒளிப்பதிவாளர் என படத்தில் வருகிற அத்தனை கதாபாத்திரங்களும் வீணாக இல்லாமல் கைத்தட்டல்களையும், விசில் சத்தங்களையும் தங்கள் பங்குக்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

படத்தின் டைட்டிலுக்காகவே அருவியின் சிறு வயதுக் காட்சிகளில் வருகிற கொட்டுகிற அருவி, கொட்டும் மழைத் துளிகள், கிளைமாக்சில் வருகிற மலைப் பிரதேசம், செடிகள், மலர்கள், நைட் எபெக்ட் காட்சிகள் என பாலுமகேந்திராவின் கேமரா கோணங்களைப் பார்த்த சிலிர்ப்பான உணர்வைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்.

எந்த இடத்திலும் துருத்திக் கொண்டிருக்காமல் மிக நேர்த்தியாக கத்தரி போட்டு படத்தின் ஒன்றலுக்கு வலு சேர்த்திருக்கிறார் எடிட்டர் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டா. பாடல்கள், பின்னணியில் மெல்லிசை என இரண்டிலும் மெய் மறக்கச் செய்கிறார்கள் இசையமைப்பாளர்கள் வேதாந்த் பரத்வாஜ், பிந்து மாலினி.

‘கல் மனசு’க்காரர்களையும் உருக வைப்பாள்!

Aditi BalanArun Prabu PurushothamanAruviAruvi Movie ReviewAruvi ReviewBindhu MaliniLakshmi GopalswamiMovie ReviewRaymond Derrick CrastaShelley CalistVedanth Bharadwaj
Comments (0)
Add Comment