RATING : 3.2/5
மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்களுக்கு சில தகுதிகளை வரையறைத்து வைத்திருக்கிறார்கள். அந்த தகுதிகளின் அடிப்படையில் தான் மருத்துவக் கல்லூரியில் சேர அவர்களுக்கு இடமும் கிடைக்கிறது.
ஆனால் அந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்துகிற முதலாளிகளுக்கான தகுதி என்ன? இந்தக் கேள்வியை துணிச்சலோடு முன் வைத்திருக்கும் படம் தான் இந்த ”பைரவா.”
தனியார் வங்கி ஒன்றில் கலெக்ஷன் ஏஜெண்ட்டாக இருக்கிறார் விஜய். அந்த வங்கியின் மேனேஜராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனிடம் ஏரியா எம்.எல்.ஏ சிபாரின் பேரில் ரெளடியான மைம் கோபி 64 லட்சம் ரூபாயை கடனாக வாங்கிக் கொண்டு தராமல் அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
மனசு நொந்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன் தான் அவமானப்பட்ட விஷயத்தை விஜய்யின் காதுகளில் போட, ”யார்கிட்டேயும் இல்லாத ஒரு பழக்கம் என்கிட்ட இருக்கு அதுதான் சொன்ன வார்த்தையை காப்பாத்துறது” என்கிற பஞ்ச்சோடு சாயங்காலத்துக்குள் பணத்தோடு வருகிறேன் என்று கிளம்புகிறார்.
அடுத்து என்ன நடந்திருக்கும்?
நீங்க நெனைக்கிறது கரெக்ட் தான்.
கிரிக்கெட் விளையாட்டுடன் கட்டமைக்கப்பட்ட ஓப்பனிங் ஸ்டண்ட் காட்சியில் மைம்கோபி அன்கோ அத்தனை பேரையும் துவம்சம் செய்து விட்டு பணத்தோடு திரும்புகிறார்.
அன்று முதல் ஒய்.ஜி.க்கு கடவுளாகத் தெரியும் விஜய்யை தனது மகள் திருமணத்துக்கு முதல் பத்திரிகை வைத்து அழைக்க, அங்கு தான் நாயகி கீர்த்தி சுரேஷை சந்திக்கிறார் விஜய். முதல் பார்வையிலே காதல்.
அதுவரை பின்னாடியே துரத்தும் விஜய் ஒரு கட்டத்தில் காதலைச் சொல்லலாம் என்று கீர்த்தி சுரேஷை நெருங்கிற போது அவருக்கு முன்பாக ஒரு ரெளடிக்கும்பல் கீர்த்தி சுரேஷை நெருங்குகிறது?
யார் அந்த கும்பல்? அவர்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? என்ன பிரச்சனை? என்று விஜய் கேட்க, கீர்த்தி சுரேஷ் சொல்லுகிற பின்னணி திருநெல்வேலி பேக்ட்ராப்பில் ப்ளாஷ்பேக்காக விரிகிறது.
அங்கு தனியார் மருத்துவக் கல்லூரியின் அடாவடி முதலாளியாக வில்லன் ஜெகபதிபாபு எண்ட்ரி.
அவர் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அதனால் அதில் படிக்கும் மாணவ, மாணவிகள் படுகிற கஷ்டங்களையும், அதனால் அந்தக் கல்லூரியில் படிக்கும் கீர்த்தி சுரேஷின் தோழி இறந்து போன சம்பவமும் விஜய்க்கு தெரிய வருகிறது.
இப்படி யாருக்கும் அடங்காமல் அட்டகாசம் செய்யும் ஜெகபதிபாபுவின் கொட்டத்தை விஜய் அடக்கினாரா? அவரிடமிருந்து மருத்துவ மாணவர்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
முதல் பாதி இரண்டாம் பாதி என்றெல்லாம் பிரிக்க வேண்டியதில்லை. படம் முழுக்க வருகிற காட்சிகளில் ரொம்பவே ரசிக்க வைக்கிறார் விஜய்.
படத்தில் மற்றவர்களை விட ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசுவுக்குத்தான் தான் பெரும் பங்கு. அத்தனை சண்டைக் காட்சிகளும் ஆக்ரோஷம் நிறைந்தததாகவும், தியேட்டரில் விசில், கைதட்டல்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் அமைத்திருப்பது சிறப்பு. விஜய்யின் மாஸ் லெவல் ஸ்டண்ட் காட்சிகளின் போது தியேட்டரில் பறக்கும் விசில் சத்தங்களும், கை தட்டல்களும் விஜய்க்கு மட்டுமல்ல, அனலின் உழைப்புக்கும் சேர்த்து தான்.
நீதிமன்றத்தில் கூண்டில் ஏறி விஜய் பேசும் சீரியசான பேச்சின் வடிவத்தை அப்படியே ப்ரிண்ட் அவுட் எடுத்து அரசாங்க ஊழியர்களுக்கு அனுப்பினால் அதைப் படித்து விட்டு, வாங்குகிற சம்பளத்துக்கு கொஞ்சமாவது ரோஷம் வந்து வேலையைச் சரியாகச் செய்வார்கள். அந்தளவுக்கு அந்த நீளமான அட்வைஸ் காட்சியில் தீப்பொறி தகிக்கிறது.
சின்னச் சின்ன க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில் கவனிக்க வைக்கிறார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகனில் காட்டுகிற ரொமான்ஸ் லுக்கை இதிலும் காட்டுகிற போது கிறங்கவும் வைக்கிறார். விஜய்க்கும், அவருக்குமான கெமிஸ்ட்ரி ஸ்க்ரீனில் போனஸ் க்யூட்.
விஜய்யின் நண்பராக வருகிறார் சதீஷ். வருகிற காட்சிகளில் எல்லாம் சிற்சில வசனங்களில் சிரிக்க வைக்கிறார். சதீஷை விட மொட்டை ராஜேந்திரன் வருகிற காட்சிகளில் இன்னும் மனம் விட்டு சிரிக்க முடிகிறது. அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.
பல படங்களில் நடிப்புத் திறமையை அசால்ட்டாக காட்டி வந்த தம்பி ராமையாவுக்கு இதில் ரொம்பவே அடக்கி வாசிக்கிற கெஸ்ட் ரோல்.
ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி என இரண்டு வில்லன்கள், இரண்டு பேருமே தங்களுக்கென்று தனி பாணியில் வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். இருந்தாலும் ஜெகபதி பாபுவை விட டேனியல் பாலாஜி தான் விஜய்க்கு சமபலம்.
ஸ்டண்ட் காட்சி வரும்போதெல்லாம் ”வர்லாம் வர்லாம்” பாடலை பின்னணியில் ஓட விட்டு தியேட்டரை அதிர வைக்கிறார் சந்தோஷ் நாராயணன். ”பாப்பா பாப்பா” பாடல் சின்னக் குழந்தைகளைக் கூட துள்ளி எழுந்து ஆட வைக்கும். மெலோடிப் பாடல்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
ஸ்டண்ட் காட்சிகளைப் போலவே படத்தில் பளிச்சென்று பாராட்டத் தோன்றும் இன்னொரு விஷயம் சுகுமாரின் பரிசுத்தமான ஒளிப்பதிவு. பவுடர் போட்டு கண்ணாடியைத் துடைத்து வைத்தாற்போல மொத்த படமும் கலர்ஃபுல் கலக்கல்.
திரைக்கதை நகர்த்திக் கொண்டு போவதில் கொஞ்சம் தடுமாறியிருந்தாலும். இயக்குநர் பரதனின் பலமே வசனங்கள் தான்.
அந்த வகையில் ”யார்கிட்டேயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்கு, அதான் சொன்ன சொல்லை காப்பாத்தறது.”
”இப்பெல்லாம் எந்த தப்பும் செய்யாத நல்லவன் அழுவுறதும், கெட்டவன் நல்லா வாழ்றதும் அதிகமாகிடுச்சுல்ல.”
”வாழ்க்கையில எதை இழந்தாலும் திரும்ப மீட்டுக்கலாம், ஆனா உறவை மட்டும் இழந்துடவே கூடாது.”
”டைமிங்கை மட்டும் ஒருத்தன் சரியா கீப் அப் பண்ணிட்டா டைம் சரி இல்லைனு அவன் புலம்ப வேண்டிய அவசியமே இருக்காது.” போன்ற வசனங்களில் தனது தனித்தன்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
படத்தில் எம்.பிரபாகரன் என்கிற பெயரில் கலை இயக்குநர் ஒருவர் இருந்திருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் அவரது வேலைப்பாடு தென்பட்டதாக தெரியவில்லை. பல படங்களில் பார்த்து சலித்த பின்னி மில்லைக் கூட அப்படியே அச்சு பிசகாமல் காட்டியிருக்கிறார்.
மொத்த படத்தின் நீளத்திலும் எடிட்டர் பிரவீன் கே.எல் ஆங்காங்கே கத்தரி போட்டிருந்தால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ரேஸ் ஸ்பீடு கிடைத்திருக்கும். அதை செய்ய விட்டிருக்கலாமே பரதன் சார்…
மக்களின் உடல்நலம் காக்கும் மருத்துவ தொழில் எவ்வளவு புனிதமானது. அப்படிப்பட்ட மருத்துவப் படிப்பை சொல்லிக் கொடுக்கக் கூடிய மருத்துவக் கல்லூரிகள் இன்றைக்கு எந்த லட்சணத்தில் உள்ளது. அந்த படிப்பை வைத்து எப்படியெல்லாம் பெரு முதலாளிகள் அப்பாவி மக்களிடம் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்கிற காலச்சூழலுக்கேற்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நினைத்திருக்கிறார் இயக்குநர் பரதன். அதற்கு மாஸ் ஹீரோ லெவலில் இருக்கும் விஜய்யும் ஓ.கே சொல்லியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
‘கத்தி’க்குப் பிறகு ‘மாஸா’ மட்டுமில்ல ‘மெசேஜ்’ ஆகவும் நடிக்க ஆரம்பிச்சிருக்கார் விஜய். அதற்காகவே இந்த ‘பைரவா’வுக்கு பலத்த கரகோஷங்களை கொடுக்கலாம்!