RATING : 3/5
சென்ற ஆண்டு 2015ல் ஜி.வி.பிரகாஷூக்கு அறிமுகப்படமாக அமைந்த ‘டார்லிங்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் அந்த செண்டிமெண்ட்டில் ‘ஜின்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த இப்படத்தை ‘டார்லிங் 2’ என்று மாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
ஃபேச்சுலர் பார்ட்டி கொண்டாட வால்பாறைக்கு போகிற ஐந்து நண்பர்களில் ஒருவனுக்கு போன இடத்தில் பேய் பிடித்து விட, அதன் பின்னணி என்ன என்பதற்கான விடையே இந்த ‘டார்லிங் 2’
கலையரசன், காளி வெங்கட், ரமீஸ், ‘ஜானி’ ஹரி, அர்ஜுன் ஆகிய ஐந்து நண்பர்களில் கலையரசனுக்கு திருமணம் நிச்சயமாகி விட, திருமணத்துக்கு முன்பு ஃபேச்சுலர் பார்ட்டியை கொண்டாட வால்பாறைக்கு செல்கிறார்கள்.
போகிற இடத்தில் கலையரசன் உடலில் ஆவி ஒன்று புகுந்து, கூட இருக்கும் மற்ற நண்பர்களை பயமுறுத்த தொடங்குகிறது. யார் அந்த ஆவி? என்று விசாரிக்கும் போது தான் இறந்து போன ரமீஸ் ராஜாவின் தம்பி ஆவி என்று தெரிய வருகிறது.
என்னையும் என் காதலி மாயாவையும் திருமணம் செய்ய விடாமல் துரோகம் செய்து பிரித்து விட்டாய் அதற்கு பழிக்குப் பழி வாங்க வந்திருப்பதாக சொல்கிறது கலையரசனின் உடம்புக்குள் புகுந்து கொண்ட அந்த ஆவி.
அது சம்பந்தமான ப்ளாஸ்பேக்கில் ரமீஸ் ராஜாவின் தம்பி ராம் நாயகி மாயாவை உயிருக்குயிராக காதலிக்க, அவர் வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் தராததால் கலையரசனின் துணையோடு மாயாவை திருமணம் செய்ய திட்டமிடுகிறார்.
ஆனால் அவனை கொஞ்ச நேரம் கலாய்க்கலாம் என்று நினைக்கு கலையரசன் விளையாட்டாக ”இந்த திருமணம் நடக்காது, நீ மாயாவை மறந்திடு” என்று போனில் சொல்லவும், அது உண்மை என்று நம்பும் ராம் தற்கொலை செய்து கொள்கிறான்.
இதனால் அதிர்ச்சியடையும் கலையரசன் அந்த குற்ற உணர்வில் இருக்கும் போது தான் வீட்டில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து நடப்பது தான் மேற்படி ஃபேச்சுலர் பார்ட்டி, ஆவி பிடி எல்லாம்…
கலையரசன் திருமணம் நடந்ததா? அல்லது சொன்னபடி கலையரசனை ராம் – மாயா காதல் ஜோடி பழி வாங்கியதா? என்பதே கிளைமாக்ஸ்.
ஹீரோவென்று தனித்து யாரையும் சொல்லி விட முடியாது. எல்லா காட்சிகளிலும் ஆறு நண்பர்களும் வருகிறார்கள். பாடல் காட்சியில் கூட சேர்ந்தே தான் டான்ஸ் ஆடுகிறார்கள்.
ஒளி பாய்ச்சும் கண்களுடன் ஆக்ரோஷமாக வரும் கலையரசன் பேயாகவும், நண்பனாகவும் மாறி மாறி நண்பர்களை பயமுறுத்தும் காட்சிகளில் மிரட்டல்!. அதேபோல அறிமுக நாயகனான ரமீஸூக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனக்கான கேரக்டரில் அவர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
நாயகியாக வரும் மாயாவுக்கு ரமீஸ்வுடனான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் – அவுட் ஆகியிருக்கிறது. முகத்தின் முன் பக்கத்தில் விழும்ஒற்றை முடி மாயாவின் அழகை கூடுதலாக்கி காட்டுகிறது.
வால்பாறை வரதனாக வரும் முனிஸ்காந்த் பேயை விரட்ட தெம்பாக ரூமுக்குள் போய் விட்டு பிறகு பேயடி வாங்கி கெத்தாக வருவது கலக்கல் காமெடி. காளி வெங்கட் ஒரு கேரக்டராக மட்டுமே வருகிறார்.
ஆள் நடமாட்டமே இல்லாத அடந்த காட்டுக்குள் பெரிய பங்களா, அமைதியாக ஓடும் ஆறு, எதிர்த்து நின்று மிரட்டும் காட்டு யானை என திகில் படத்துக்குரிய லொக்கேஷனை மிகச்சரியாக கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் சதீஸ் சந்திரசேகர்.
வால்பாறையிலுள்ள ஒரே ஒரு பங்களாவைச் சுற்றித்தான் முக்கால்வாசி கதை நகர்கிறது. அந்த பங்களாவுக்குள் ஒவ்வொருவராக பயந்து நடப்பதும், நடுங்குவதும், ஓடுவதுமாக இருக்கும் முதல்பாதியில் இன்னும் சில சுவாரஷ்யமான காட்சிகளைச் சேர்த்து விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
உண்மைச் சம்பவமாக இருந்தாலும் மத விஷயத்தை முன் வைத்து நாயகி மாயாவை ரமீஸ் ராஜாவின் பெற்றோருக்கு பிடிக்காமல் போகிறது என்கிற பழைய காரணத்தை படத்தில் தவிர்த்திருக்கலாம்.
விஜய் கார்த்திக் கண்ணனினின் ஒளிப்பதிவும், ரதனின் இசையும் காட்டுக்குள் இருக்கும் அந்த தனி பங்களாவை மிரட்டலோடு ரசிக்க வைத்திருக்கிறது.
சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் சதீஷ் சந்திரசேகர்.
பின்னணி இசை, கேமரா ஆங்கிள்களை வைத்தே பெரும்பாலான காட்சிகளில் ரசிகர்களை மிரட்டுகிறார்.
முனிஸ்காந்த், அர்ஜூனன், காளி வெங்கட் என மூன்று காமெடியன்களை வைத்துக் கொண்டு காமெடிக் காட்சிகளை கூட வைக்காமல் திரைக்கதையை நகர்த்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம். அதற்குப் பதிலாக அவர்களின் பயத்தையே காமெடியாக்கி விட்டிருந்தால் இன்னொரு காமெடி – திகில் ஹிட் படமாக அமைந்திருக்கும்.
‘டார்லிங் 2’ – லேசான மிரட்டல்!