RATING : 3/5
தன்னை உருக உருக காதலிக்கும் நாயகி ஷனாயாவை அவரது அப்பாவிடமிருந்து சந்தானம் எப்படி மீட்டெடுத்து திருமணம் செய்து கொள்கிறார் என்பதே இந்த ‘தில்லுக்கு துட்டு.’
மிடில் க்ளாஸ் நாயகனான சந்தானத்திடம் பள்ளி படித்த காலத்திலிருந்தே தனது மனசை அடகு வைக்கிறார் சேட்டு வீட்டுப் பெண்ணான நாயகி ஷனாயா.
இருவரின் காதலுக்கும் ஷனாயாவின் அப்பா செளரப் சுக்லா குறுக்கே நிற்பதோடு சந்தானத்தை கூலிப்படையைச் சேர்ந்த ‘மொட்டை’ ராஜேந்திரனின் துணையோடு தீர்த்துக் கட்டவும் திட்டமிடுகிறார்.
அவர் அட்வைஸ்படி மகளின் திருமணத்துக்கு சம்மதம் சொல்லும் செளரப் சுக்லா திருமணத்தை தனது சொந்தங்களுக்கு தெரியாமல் ரகசியமாக நடத்த விரும்புவதாகச் சொல்லி சந்தானம் குடும்பத்தை சிவ கொண்ட மலை என்ற இடத்தில் இருக்கும் பங்களாவுக்கு வரச்சொல்கிறார்.
இருவரின் குடும்பமும் அங்கு செல்ல அங்கு பேய் கெட்டப்புகளில் சந்தானத்தையும் அவரது குடும்பத்தையும் பயமுறுத்தும் வேலையை ஆரம்பிக்கிறது மொட்டை ராஜேந்திரனின் குரூப்.
ஆனால் அங்கோ உண்மையிலேயே பேய் நடமாட்டம் இருப்பது தெரிய வர, அதன் பிறகு நடப்பது என்ன என்பதை காமெடி கலாட்டக்களோடு சொல்லியிருக்கிறார்கள்.
முருகன் பக்தராக வரும் சந்தானம் முந்தைய படத்தை விட ஸ்டைலீஷாக தெரிகிறார். காமெடியனுக்கு குட்பை, இனி ஹீரோ வேஷம் தான் நிரந்தரம் என்று முடிவெடுத்து விட்டதை நடிப்பு, டான்ஸ், ஸ்டண்ட் என எல்லாவற்றிலும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.! பயமுறுத்த வரும் பேயையே தனது டைமிங் டயலாக்கால் கலாய்க்கிற காட்சிகளில் தியேட்டரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.
நாயகியாக வரும் அறிமுகம் ஷனாயா சேட்டு வீட்டுப் பெண்ணுக்குரிய முக லட்சணம். என்றாலும் டயலாக் பேசுவதில் ரொம்பவே கஷ்டப்படுவது அவரது லிப் மூவ்மெண்ட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது.
சந்தானம் மட்டுமில்லாமல் கூடுதல் காமெடிக்கு கியாரண்டி தந்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரனன். குறிப்பாக கிளைமாக்ஸில் சந்தானத்தை பயமுறுத்த தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் போடும் ப்ளான்கள் எல்லாமே சிறப்பு.
இவர்கள் போதாதென்று கருணாஸூம், ஆனந்தராஜூம் தங்கள் பங்குக்கு காமெடியில் கதற விடுகிறார்கள். அதிலும் ”கொஞ்சம் காமெடி பண்ண ஆரம்பிச்சா நான் வில்லங்கிறதையே மறந்துருவீங்களே..?” என்று ஆனந்தராஜ் சொல்கிற இடத்தில் கைதட்டல்களை அள்ளிக் கொள்கிறார்.
தமனின் இசையில் பாடல்களும், கார்த்திக் ராஜாவின் மிரட்டலான பின்னணி இசையும் படத்தின் வேகத்துக்கு கூடுதல் பலம்.
”காணாமப் போன முட்டையைத் தேடி வந்த டைனோசர் மாதிரி” இருக்கே என்று மொட்டை ராஜேந்திரனைப் பார்த்து சந்தானம் கலாய்ப்பது போல, படத்தில் வருகிற எல்லா கேரக்டர்களையும் கலாய்க்கும் டயலாக்குகள் படத்தில் ஆங்காங்கே சிரிப்பு வெடியை வெடிக்க விடுகின்றன. என்றாலும் உருவத்தை பார்த்து கலாய்ப்பதை இனி வரும் படங்களில் தவிர்த்து விடுங்களேன் சந்தானம் ஜீ!
ஒரு சரித்திரப் படம் போல ஆரம்பித்து பிறகு ஒரு சாதாரணப் படமாகி, இடைவேளைக்குப் பின்னர் ஒரு திகில் படமாக மாறினாலும் எந்தக் காட்சியையும் அலுப்பு தட்டாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இதுவும் வழக்கமான பேய் காமெடிப்படம் தான் என்கிற மனநிலையோடு போனாலும் தியேட்டரையே அதிர வைக்கிற வெடிச்சிரிப்புக் காட்சிகளில் படத்தோடு ஒன்றிப் போக வைத்து விடுகிறார் அறிமுக இயக்குநர் ‘லொள்ளு சபா’ ராம் பாலா.
தில்லுக்கு துட்டு – வசூலை அள்ளிக் கொட்டும்!