RATING 3/5
80 களின் காலகட்டம் என்பது தமிழ்சினிமாவின் பொற்காலம். அன்றைய நாட்களில் தமிழில் ரிலீசான பல படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடியவை. ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். குறிப்பாக ரஜினி, கமல் இருவருடைய படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் திருவிழா கொண்டாட்டம் தான்.
நீ இத்தனை அடி கட்-அவுட் வைக்கிறாயா? அப்போ நான் எத்தனை அடி கட்-அவுட் வைக்கிறேன் பார் என்று போட்டி போட்டுக் கொண்டு கட்-அவுட் வைப்பார்கள்.
இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் ஆமை- அணில் என அடித்துக் கொள்ளும் அஜித்-விஜய் ரசிகர்களுக்கு முன்னோடியே ரஜினி-கமல் ரசிகர்கள் தான்.
அந்த 80களின் காலகட்டத்தில் ரஜினி – கமல் ரசிகர்களுக்கிடையே உள்ள நட்பு, மோதல், அவர்களுடைய யதார்த்த வாழ்க்கை ஆகியவற்றை ஞாபகப்படுத்தும் படம் தான் இந்த ‘எங்கிட்ட மோதாதே.’
நாகர்கோவிலில் நண்பர்களான ரஜினி ரசிகர் நட்ராஜிக்கும், கமல் ரசிகர் ராஜாஜிக்கும் கட்-அவுட் வரைவது தான் முழு நேர வேலை. தொடர்ந்து கூலிக்கு வேலை செய்ய விரும்பாமல் முதலாளியின் ஆசியுடனே தனியாக கட்-அவுட் வரையும் தொழிலை ஆரம்பிக்க இருவரும் நட்ராஜின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வண்டியேறுகிறார்கள்.
அங்கு கட்-அவுட் தொழில் அமோகமாக போய்க் கொண்டிருக்க, இடையில் ராஜாஜியின் தங்கச்சி சஞ்சிதா ஷெட்டியுடன் நட்ராஜ் காதல், இன்னொரு புறம் அதே ஊரைச் சேர்ந்த பார்வதி நாயருடன் ராஜாஜிக்கு காதல் என தனி ட்ராக் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில் அந்த ஊர் அரசியல்வாதியான ராதாரவிக்கு சொந்தமான தியேட்டரில் ரஜினி, கமல் படங்கள் ரிலீசாகிறது. அதில் கட்-அவுட் வைப்பதில் இருவரின் ரசிகர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட, அந்த சண்டையில் தியேட்டர் பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் இனி ரஜினி, கமல் படங்களை திரையிடப்போவதில்லை, கட்-அவுட் வைக்கவும் அனுமதியில்லை என்கிற முடிவுக்கு வருகிறார் ராதாரவி. அதோடு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நட்ராஜ்- ராஜாஜி இருவரையும் பிரித்தும் விடுகிறார்.
அரசியல்வாதியான ராதாரவியின் அந்த சூழ்ச்சியை ரஜினி- கமல் ரசிகர்கள் மீண்டும் இணைந்து எப்படி முறியடிக்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 80 கால காட்டங்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப்படம். அந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் ஜானி ஆர்ட்ஸ் உட்பட பல கட்-அவுட் வரைபவர்கள் பிரபலம். அந்த சந்தோஷச் சிதறல்களை மீண்டும் நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநார் ராமு செல்லப்பா.
இயல்பாகவே நட்ராஜிடம் ரஜினியின் மேனரிசங்கள் இருந்து வருவது உண்மை, அதை இந்தப் படத்தில் ரஜினி ரசிகர் கேரக்டருக்கு மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நூறு சதவீதம் நட்ராஜ் ரஜினி ரசிகர் கேரக்டரில் பொருந்தியிருக்கிறார்.
கையில் ஸ்டைலாக பெயிண்ட் பிரஸ்ஸைப் பிடிப்பது, துண்டு பீடியை உதட்டில் வைத்து இழுக்கும் போது காட்டுகிற ஸ்டைல், நடையில் ஸ்டைல், தலை முடியை கோதி விடுகிற ஸ்டைல் என படம் முழுக்க அச்சு அசல் ரஜினி ரசிகராகவே வந்து ரசிக்க வைக்கிறார்.
அதேபோல கமல் ரசிகராக வரும் ராஜாஜியும் பொருத்தமான தேர்வு. ரஜினி கேரக்டரில் நட்ராஜ் வேகம் என்றால் கமல் ரசிகர் கேரக்டரில் அமைதியாக வர வேண்டிய இடத்தில் அமைதியாகவும், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும், ஆட்டம் போட வேண்டிய இடத்தில் ஆட்டமும் போடுகிறார்.
சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் என கிராமத்துப் பின்னணி கொண்ட கதைக்கு சரியான தேர்வு. பாவாடை- தாவணியில் வரும் இருவரையும் அந்த லுக்கில் பார்ப்பதே ஆச்சரியமான அழகு தான்.
அரசியல்வாதியாக வரும் ராதாரவிக்கு நடிக்கச் சொல்லித் தர வேண்டுமா என்ன? மனுஷன் நிஜ அரசியல்வாதியின் அத்தனை ஜாடைகளையும் தனது நடிப்பில் கொட்டியிருக்கிறார். அவரின் அள்ளக்கையாக வரும் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன் நடிப்பிலும் குறையில்லை.
ஊர் நண்பராக வரும் முருகானந்தம் வருகிற காட்சிகள் எல்லாம் கலகலப்புக்கு கியாரண்டி. அதிலும் மன்றத் தலைவர் பேசும் போது இடையிடையே கொடுக்கும் கவுண்டர்கள் செம கலாய்.
திருநெல்வேலி மாநகரத்தின் 80களின் டோனை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா.
நடராஜன் சங்கரனின் இசையில் ‘உன பார்த்தேன் ராசாத்தி’ பாடல் மனசை மயக்கும் மெலோடி. 80 காலகட்ட பின்னணி இசையிலும் கவர்கிறார்.
எந்த நடிகருக்கு ரசிகராக இருந்தாலும் ஒரு பொதுப்பிரச்சனை என்றால் அதையெல்லாம் மறந்து ஒன்று கூடுவோம் என்கிற கருத்தை வலியுறுத்தியதோடு ரசிகர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று இந்தக் காலத்து அஜித் – விஜய் ரசிகர்களுக்கு ஒரு படிப்பினையாகவும் தந்திருக்கிறார் இயக்குநர் ராமு செல்லப்பா.
எங்கிட்ட மோதாதே – கொண்டாட்டம்!