ஹாரர் படம் போன்ற தோற்றத்தைத் தந்து ஒரு வித்தியாச முயற்சியைச் செய்துள்ள படம்
வேளச்சேரியில் ஒரு ப்ளாட்டைச் சொந்தமாக வாங்கி குடிவருகிறார்கள் தர்ஷனும் அர்ஷா சாந்தினி பைஜுவும். அந்த வீட்டில் பேய் இருப்பதாக அர்ஷா நம்புகிறார். அதற்கேற்றார் போல் சிற்சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. பின் ஒரு கட்டத்தில் இதே வீட்டில் இன்னொரு குடும்பம் வேறோர் காலத்தில் வாழ்வது தெரிய வருகிறது. அந்த இன்னொரு குடும்பம் தான் காளிவெங்கட் குடும்பம். 2022- கால கட்டத்து தர்ஷன் பேமிலியும், 2012 கால கட்டத்து காளி வெங்கட் பேமிலியும் ஒரே வீட்டில் சந்திக்கும் அனுபவங்கள் தான் இந்தப்படம்
தர்ஷனுக்கு ஹீரோவாக இதை முதல் படம் என்று சொல்லலாம். முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்துள்ளார். அர்ஷா சாந்தினிபைஜு நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். காளிவெங்கட் வழக்கம் போல தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். வினோதினி நடிப்பில் காமெடியும் எமோஷ்னலும் கலந்து கட்டி அசத்துகிறது
படத்தில் இசையே ஒரு கதை சொல்லியாக பயணிக்கிறது. வெல்டன் ராஜேஷ் முருகேசன். Ms.சதீஷ் தனது ஒளிப்பதிவில் கூடுமான வரையில் திறமையைக் காட்டியுள்ளார். எடிட்டரின் பணியை படத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும். வாழ்த்துகள் A.நிஷார் ஷரேஃப்
ஒரே வீட்டில் இரு குடும்பம் வாழ்வது சாதாரணம். ஆனால் இரு குடும்பமும் ஒருவருக்கு ஒருவர் பார்க்க முடியாது என்பதும், வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்கிறார்கள் என்பதும் தமிழ் ஆடியன்ஸுக்குப் புத்தம் புதுசு. அதை நேர்த்தியான திரைக்கதையால் சொல்லியுள்ளார் இயக்குநர் T.ராஜவேல். இன்னும் சில விசயங்களை ரசிகர்களுக்கு எளிமையாகத் தெரியப்படுத்தியிருக்கலாம். நிறைய குழப்பங்களைத் தந்தாலும் ஒரு மாற்று சினிமா எக்ஸ்பீரியன்ஸைக் கொடுத்து நல்ல ரசனைக்குத் தீனி போடுகிறது இந்தப்படம்
3.5/5