நட்சத்திரங்கள் – கெளதம் கார்த்திக், சொனாரிகா பதோரியா, அஸ்ரிதா செட்டி, அங்கூர் சிங், எம்.எஸ். பாஸ்கர்
இசை – கே.பி
ஒளிப்பதிவு – ராசாமதி
இயக்கம் – கலா பிரபு
வகை – அட்வெஞ்சர் – பேண்டஸி – ஆக்ஷன்
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’
கால அளவு – 1 மணி நேரம் 57 நிமிடங்கள்
RATING – 2.5/5
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு எரிகல்லைத் தேடும் ஹீரோவின் ஒரு த்ரில்லிங்கான காட்டுப் பயணமே இந்த ‘இந்திரஜித்.’
தமிழ்சினிமாவில் அட்வெஞ்சர்- பேண்டஸி படங்கள் என்பது ரசிகர்களுக்கு எப்போதாவது கிடைக்கும் ரசிப்பனுபவம். அந்த வகையில் விஜய்யின் ‘புலி’ படத்துக்குப் பிறகு குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்கக் கூடிய படமாக தந்திருக்கிறார் இயக்குனர் கலாபிரபு.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்து பூமியில் வந்து விழும் அணுத்துகள் ஒன்று இந்தியாவிலுள்ள அருணாச்சலப் பிரதேசத்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து விடுகிறது.
அபூர்வ மருத்துவ குணங்கள் கொண்ட அந்த அணுத்துகளை பயன்படுத்தினால் 400 வருடங்களுக்கு இந்திய மக்கள் எல்லோரும் நோய் நொடியின்றி வாழலாம். அப்படிப்பட்ட மகத்துவமான அந்த அணுத்துகளைத் தேடி கண்டுபிடிக்க ஹீரோ கெளதம் கார்த்திக்குடன் கிளம்புகிறார் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை ஆய்வாளர்.
இந்த திட்டத்தை தெரிந்து கொள்ளும் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒருவரும் தன் குழுவோடு அவர்களை பின் தொடர்ந்து செல்கிறார்? இரு குழுக்களின் தேடலின் அந்த அணுத்துகள் யாருக்கு கிடைத்தது? என்பதே கிளைமாக்ஸ்.
‘இவன் தந்திரன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக்கின் துறுதுறுவென்று நடித்திருக்கிறார் கெளதம் கார்த்திக். மாமாவின் வீடு, ஹீரோயின், நாய்க்குட்டி என எதைப் பார்த்தாலும் அதைப் பார்த்து வியந்து போகிற அவருடைய குணம் படம் பார்க்கும் ரசிகர்களுக்கே ஃபுல் எனர்ஜி! படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் கூட, அவர்களை விட்டு விட்டு இயற்கையை ரசிப்பதும், அதை நோக்கிய பயணத்தை அனுபவிப்பதுமாக இயற்கையின் காதலன் ஆக மாறியிருக்கிறார்.
சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி என படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும் கூட காட்சிகளில் அவர்களுக்கான முக்கியத்துவம் என்பது வெகுக்குறைவு தான். அதிலும் அஷ்ரிதா ஷெட்டி கெளதம் கார்த்திக்கை ஏன் காதலிக்கிறார்? என்பதே புரியாத புதிர்.
சுதான்ஷு பாண்டே, சச்சின் கேதகேர் ஆகியோர் கேரக்டர்களுக்கேற்ற குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
‘ஹேப்பி’யாக வரும் கிராபிக்ஸ் நாய்க்குட்டியின் குறும்புத்தனங்கள் சுட்டீஸ்களை ஈர்க்கும், எம்.எஸ்.பாஸ்கர் காமெடி என்ற பெயரில் செய்யும் சேட்டைகள் பெரிதாக நம்மை சிரிக்க வைக்கவில்லை.
கலை, மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள், மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை தான் படத்துக்கு மிகப்பெரிய பலம். எந்தக் காட்சி நிஜம், எந்தக் காட்சி கிராபிக்ஸ் என்பகிற வேறுபாடே தெரியாதவாறு திரையில் ‘மேஜிக்’ காட்டியிருக்கிறார்கள். அதற்கு ஒளிப்பதிவாளர் ராசாமதியின் பனித்துளி போன்ற பெர்பெக்ட்ட்டான ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
கிளைமாக்ஸில் அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் சேஸிங் காட்சி நம்மை சீட்டு நுணிக்கு வரவைக்கும் பரபரப்பான எபிசோட்ஸ். அந்தக் காட்சிகளில் ராசாமதியின் உழைப்பு ஒவ்வொரு நொடியும் வெளிப்படுகிறது.
டிவைன் மோடில் மனசை லேசாக்குகிற பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் கே.பி. பாடல்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
குழந்தைகளை கவரும் அம்சங்கள் தான் படத்தின் பிரதானம் என்றாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான ஒரு எரிகல் என்ற கதை சொல்ல ஆரம்பித்து அதற்கான வரலாற்று சமாச்சாரங்களோடு கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கலாபிரபு.
குழந்தைகள் பெண்கள் மட்டுமல்ல, என் மனசும் ‘குழந்தை மனசு’ தான் என்று சொல்கிற 60 வயசைத் தாண்டிய பெருசுகளையும் நிச்சயம் கவர்வான் இந்த இந்திரஜித்!