முன்னோடி – விமர்சனம்

RATING : 3/5

மூக வாழ்க்கையில் நாம் யாரை முன்னோடியாக ஏற்றுக் கொள்கிறோம் என்பதை வைத்துத்தான் நமது வாழ்க்கையின் நல்லது, கெட்டது எல்லாமே தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படம் தான் இந்த ”முன்னோடி”.

ஆபத்து ஒன்றில் ஏரியா ரெளடியான அர்ஜூனாவைக் காப்பாற்றுகிறார் ஹீரோ ஹரீஸ். அன்று முதல் ஹரீஸை தனது சொந்தத் தம்பி போலவும், வலதுகரமாகவும் கூடவே வைத்துக் கொள்கிறார் அர்ஜூனா.

ஒரு சந்தர்ப்பத்தில் அர்ஜூனாவின் அடியாட்களின் கத்திக் குத்துக்கு சொந்தத் தம்பியை பறி கொடுக்கிற நிலை ஹரீஸுக்கு ஏற்படுகிறது. இதனால் ஆவேசமாகும் ஹரீஸ் தன் தம்பியின் இழப்புக்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக சொந்த அண்ணனைப் போல இருந்த அர்ஜூனாவுக்கே எதிரியாக வந்து நிற்கிறார். அந்த ”வளர்த்த கடா மார்பில் பாய்கிற” நேரும் சூழலை எப்படி கையாள்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

தனக்கு தம்பி என்று ஒருவன் வந்ததும் சிறு வயதிலிருந்தே அம்மா அவன் மீது காட்டும் அதீத அக்கறையில் அம்மா, தம்பி இருவர் மீதும் கோபக்கணலை உமிழ்கிறார் ஹரீஸ். அதற்காகவே பெரும்பாலான காட்சிகளில் முகத்தை முறுக்கேற்றிக் கொண்டு வைத்துக் கொள்கிறார். பின்னர் அம்மா ஏன் தம்பியிடம் மட்டும் அதீத பாசம் காட்டுகிறார் என்கிற உண்மை தெரிய வரும் போது உடைகிற காட்சியில் ரசிகர்களை உருக வைத்து விடுகிறார். அதன்பிறகு ஹீரோயின் யாமினி பாஸ்கர் மீதான காதல், ரெளடித்தனத்தை கை விட்டுவிட்டு சந்தோஷமாக சமூக வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிற இடத்தில் ஹீரோயிஸத்தின் உச்சத்தை தொடுகிறார்.

நாயகியாக அறிமுகமாகியிக்கும் யாமினி பாஸ்கர் ஆந்திரா வரவு. ஹீரோவுடனான காதல் கெமிஸ்ட்ரியில் காரம் அதிகமில்லை என்றாலும் பாடல் காட்சியில் சிஜி ஒர்க் அவரை பேரழகியாக்கி காட்டுகிறது.

‘கங்காரு’ படத்தில் அமைதியே உருவாக வந்த அர்ஜூனா இதில் கண்களாலேயே மிரட்டுகிற அரசியல்வாதி கம் ரெளடி கேரக்டரில் கனகச்சிதம். அதிலும் அந்த கோவில் பைட் சீன் ஒன்றில் எதிரிகளை புரட்டியெடுக்கும் காட்சி மாஸ் லெவல்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்மாவாக வரும் சித்தாரா இரண்டு மகன்களுக்கிடையே நடத்தும் பாசப்போராட்டத்தில் மனசில் இடம் பிடிக்கிறார்.

துடிப்பான போலீஸ் அதிகாரியாக வரும் ஷிஜாய் வர்கீஸ் பேசுகிற வசனங்களில் மலையாள வாடை தூக்கலாக இருப்பது படத்தை ரசிப்பதில் நெருடலைத் தந்தாலும் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு ஏகப்பொருத்தம்.

அர்ஜூனாவின் மச்சானாக வரும் பாவெல் தூத்துக்குடி பாஷையை எந்த திக்குத் திணறலும் இல்லாமல் பேசி அசத்துகிறார். ”ஒண்ணு சாதிப்பாசம் இருக்கணும், இல்லேன்னா சொந்தக்காரன்கிற பாசமாவது இருக்கணும்” என்று அவர் பேசுகிற வசனம் இன்றைக்கும் தென் மாவட்டங்களில் இருக்கிற நிஜத்துக்கு சாட்சி.

பிரபுசங்கரின் இசையில் எல்லா பாடல்களும் கேட்டவுடன் முணுமுணுக்க வைத்து விடுகிறது. பின்னணி இசையும் கச்சிதம். அம்மா செண்டிமெண்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள், காமெடி என்ற பெயரில் திணிக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றில் கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர்!

‘தொழில் பழகு’ என்பதை விட ‘தொழில் நேசி ‘ என்கிற மாற்றுச் சிந்தனையுடன் முதல் படத்திலேயே ஆக்‌ஷன், செண்டிமெண்ட், ப்ரெண்ட்ஷிப், லவ் என கமர்ஷியல் படத்துக்குரிய சகல லட்சணங்களையும் கொட்டித் தந்து கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.டி.ஏ குமார்.

முன்னோடி – வெற்றிக்கு முதல்படி!

Arjuna JeyaHarishMunnodiMunnodi Movie ReviewMunnodi ReviewPavelSiththaraYamini Basker
Comments (0)
Add Comment