நந்தன்- விமர்சனம்

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறான் நந்தன்

இந்தக் காலத்திலெல்லாம் யாரு சாதி பாக்குறா? இப்பவுமா இப்படியெல்லாம் நடக்கும்? என்ற கேள்வியுடையவர்களை திரைக்குள் தள்ளி, “பாருங்கள் இது படமில்ல நிஜம்” என்கிறார் இயக்குநர் இரா.சரவணன். நந்தனார் புராணமே மிகவும் அடிமை சாசனப் புராணம் தான். அதைப் போன்ற ஒரு அடிமை புர நாயகனாக வருகிறார் சசிகுமார். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பாலாஜி சக்திவேலைக் கண்டாலே பதறும் சசிகுமார், ஒரு கட்டத்தில் அவரை எதிர்க்கும் சூழல் வருகிறது. அதுவும் பஞ்சாயத்து தலைவர் பதவி மூலமாக வருகிறது. அதனால் ஒடுக்கப்பட்ட வர்க்கம் சந்திக்கும் இன்னல்களும், சிந்திக்கும் மின்னல்களும் படத்தின் கதை

கதையின் நாயகன் சசிகுமார் சில இடங்களில் மட்டுமே கவனம் ஈர்க்கிறார்..பல இடங்களில் அவரது கேரக்டர் ஒட்டவே இல்லை..ஸ்ருதி பெரியசாமி கூடுமான வரை எதார்த்த நடிப்பை வழங்கியுள்ளார். பாலாஜி சக்திவேல் கேரக்டர் இன்னும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கலாம். ஏனைய கேரக்டர்களில் யாரும் அழுத்தமான முத்திரையைப் பதிக்கவில்லை.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்த உதவுகிறது. கேமரா மேன் தஞ்சைப் பகுதியின் அழகை அள்ளி வந்துள்ளார். எடிட்டர் இரண்டு மணி நேரத்திற்குள் படத்தை முடித்தது சாமர்த்தியம்

நிச்சயமாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு, தேசியக்கொடி ஏற்றும் உரிமை மறுக்கப்பட்டே வருகிறது. இந்த வலிமிகுந்த உண்மையை பதிவு செய்தே ஆகவேண்டும். அதைச் செய்துள்ள இயக்குநர் இரா. சரவணனை வாழ்த்தியே ஆகவேண்டும். அதே சமயம் இந்த நல்ல கருத்தை நல்ல கலைப் படைப்பாக்க அவர் தவறியுள்ளார். படத்தில் வெறும் சம்பவங்கள் தான் வருகிறதே தவிர, திரைக்கதை நகரவே இல்லை. படமாக இல்லாமல் பதிவாக இருப்பதால் நந்தனை வெற்றியோடு சொந்தம் கொண்டாட முடியவில்லை
2.75/5

Actor Sasikumardirector era.saravananNandhan movie