நட்சத்திரம் நகர்கிறது- விமர்சனம்

டைட்டில் பர்ஸ்ட் லுக் என அனைத்திலும் வித்தியாசத்தை கொண்டிருந்த நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்கு?

இன்றைய காலத்திய லவ்வர்ஸ் இருவர் பெட்ரூமில் போடும் ஒரு சண்டையோடு படம் துவங்குகிறது. லவ்வர்ஸான காளிதாஸ் துஷாரா விஜயன் இவர்களின் சண்டைக்கு காரணம் ஜாதி பற்றிய நாயகனின் புரிதலற்ற உரையாடல். அப்படியே நகரும் படம் ஒரு நாடக ட்ரூப்பில் வந்து சேர்கிறது. காதல் பற்றிய நாடகம் போட தீர்மானிக்கும் நாடக குருப்பின் மாஸ்டர் & குழு இக்கால காதலைப் பற்றி விவாதிக்கிறார்கள். அங்கு கலையரசன் இருக்கிறார். அவருக்கு ஒரு கதை இருக்கிறது. ஒரு இளைஞன், அவரது இணையான ட்ரான்ஸ் வுமன், ஒரு வுமன்ஸ் ஜோடி, மற்றும் ஆண் ஜோடி என பாலினம் கடந்த காதலர்களும் அங்கு இருக்கிறார்கள். முடிவில் இவர்கள் விவாதிக்கும் காதல் சார்ந்த நாடகம் நடந்ததா? என்பதே படத்தின் கதை

கலையரசன் பா.ரஞ்சித் படம் என்றால் மட்டும் அப்படி பிரகாசிக்கிறார். காரணம் ரஞ்சித்தின் கதாப்பாத்திர வடிவமைப்பு. காளிதாஸ் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களிலும் கவனம் ஈர்க்கிறார். இவர்களை எல்லாம் சிங்கிள் ஷாட்டில் ஓரம் கட்டிவிடுகிறார் துஷாரா விஜயன். மிகச்சிறந்த வார்ப்பு அவரது கேரக்டர். இவர்கள் மட்டும் தான் என்றில்லை படத்தில் அனைவருமே நடிப்பில் அசரடித்துள்ளார்கள்

டென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் நச் ரகம். ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஒரு பாடலும் அதை படமாக்கப்பட்ட விதமும் அட்டகாசம். நாடக பாணியிலான மேக்கிங் தான் இக்கதைக்கு பொருத்தம் என்பதால் கிஷோர்குமார் அதற்கேற்றாப் போல் ஒளிப்பதிவை வடிவமைத்திருக்கிறார்

கலைகள் மூலம் சமூகநீதியை பேசும்போது அதற்கு எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதையும் மீறி கலைவழி சமூகநீதி ஒளிர்விடும் என்பதாக படத்தின் முடிவு அமைந்துள்ளது. படத்தின் திரைக்கதையில் இலக்கை நோக்கிய பயணம் மெதுவாக இருப்பதாலும், இலக்கு இதான் என்பதை குறிக்க அதிகநேரம் எடுப்பதாலும் காமன் ஆடியன்ஸுக்கு படம் நிச்சயமாக சலிப்பு தட்டும். ஆனால் பா.ரஞ்சித் படங்களில் இப்படியொரு வித்தியாசமான படம் என்பதால் அனைவரும் இந்த அனுபவத்தை பெற ஒருமுறை படத்தைப் பார்க்கலாம்

3/5

#NatchathiramNagargiradhu #நட்சத்திரம் நகர்கிறது

Actor kalidas jayaramActress Dushara VijayanDirector Pa RanjithNatchathiramNagargiradhu movie