நவரச திலகம் – விமர்சனம்

RATING : 2.3/5

சிவகார்த்திகேயன் ரூட்டிலேயே தானும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய் டிவி ‘அது இது எது’ புகழ் மா.கா.பா ஆனந்த்.

சோலோ ஹீரோவாக பெர்பார்மென்ஸ் செய்ய பயப்படுகிறாரோ என்னவோ? ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் இதில் கருணாகரனுடன் சேர்ந்து காமெடி செய்திருக்கிறார்.

ரொம்ப ரொம்ப புதுசு, புது முயற்சி என்றெல்லாம் படத்துக்கு தனித்துவம் கற்பித்து விட முடியாது. வழக்கமாக பார்த்து பார்த்து சலித்துப் போன கதைகளில் இப்படி ஒரு மேட்டர், அது இப்படி இருந்தா எப்படி இருக்கும்? என்று டைரக்டர் யோசித்திருக்கிறார். அதை சீரியஸாக சொல்லாமல் காமெடியாக தந்திருக்கிறார்.

வழக்கம் போல ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறேன் என்று நண்பன் கருணாகரனும் ஊரைச் சுற்றி வருபவர் மா.கா.பா ஆனந்த்.

ட்ரெயினில் வித்-அவுட்டில் பயணம் செய்யும் போது நாயகி ஸ்ருஷ்டி டாங்கேவை பார்த்த மாத்திரத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார். சும்மா ஊர் சுற்றுபவனை எப்படி மகளுக்கு கட்டிக்கொடுப்பது என்று யோசிக்கும் சிருஷ்டியின் அப்பா ஜெயப்பிரகாஷ் மா.கா.பாவை தவிர்ப்பதற்காகவே தன் மகளுக்கு காது கேட்காது, வாயும் பேச வராது என்று பொய் சொல்கிறார். இருந்தாலும் அசரடிக்கும் அழகில் கிறங்கிப் போன மா.கா.பா சிருஷ்டியைத் தேடி அவருடைய ஊருக்கே வருகிறார்.

வந்த இடத்தில் சிருஷ்டி அப்படியெல்லாம் இல்லை என்று தெரிய வரவும், சிருஷ்டியும் மா.கா.பாவின் காதலில் விழுகிறார்.

இதற்கிடையே சிருஷ்டியின் அக்காவுக்கு சித்தார்த் விபினை நிச்சயம் செய்கிறார் அப்பா ஜெயப்பிரகாஷ். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபிறகு தான் சித்தார்த் விபின் தனக்கு தாய்மாமன் முறை மாமா என்று மா.கா.பாவுக்கு தெரிய வருகிறது.

எங்கே அவர் திருமணம் நடந்தால் தன் காதலி தனக்கு சின்ன அத்தை முறையாகி உறவுச்சிக்கல் வந்து விடுமே? என்கிற பயத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். அது நடந்ததா? திடீரென்று வந்த உறவுச்சிக்கலை சமாளித்து சிருஷ்டியை மா.கா.பா கை பிடித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

முந்தைய படத்தை விட இதில் நடிப்பிலும், ரசிக்கக் கூடிய காமெடி செய்வதில் ஒருபடி முன்னேறியிருக்கிறார் மா.கா.பா ஆனந்த்.

ஹீரோவுக்குரிய எந்த பில்டப்பும் இல்லாமல் கேரக்டருக்கு என்ன தேவையை அந்த அளவான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார். சிருஷ்டி டாங்கே தனக்கு சின்ன அத்தைமுறை வந்து விடுவாரோ என்கிற பயத்தில் திருமணத்தை நிறுத்த அவர் செய்யும் கலாட்டாக்கள் காமெடி ஹைலைட்! அதானே அம்புட்டு அழகை கொட்டி வெச்சிருக்கிற சிருஷ்டி டாங்கே அத்தை முறை என்றால் தூரத்துல இருந்து பார்க்கிற ரசிகர்களுக்கே கோபம் வரும் சேர்ந்து நடிக்கிற மா.கா.பாவுக்கு வராதா?

துள்ளி வரும் வெள்ளை முயல்குட்டி போல காட்சிகளில் நடிப்பு, பாடல்களில் கவர்ச்சியுமாக வருகிறார் சிருஷ்டி டாங்கே.

மா.கா.பாவின் நண்பராக வரும் கருணாகரன் காமெடிக்கு என்றாலும் படம் முழுக்க மா.கா.பாவுடனே வருகிறார். கிட்டத்தட்ட அவரும் ஒரு ஹீரோ தான். அவருக்கே உரிய நக்கல் நையாண்டி ஸ்டைல் வசனங்களுடன் கவர்கிறார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்தின் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் வில்லனாகவும், காமெடியனாகவும் கலக்கியிருக்கிறார். தயிர்சாதம் மாதிரியான அவரது முகவெட்டுக்கு காமெடி சூப்பராக ஒர்க்-அவுட் ஆகிறது. இந்த ஏரியாவுல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் பெரிய காமெடியனாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

படத்தில் வருகிற எல்லா கேரக்டர்களையுமே காமெடியாக்கி உலவவிட்டு ரசிகர்களை சிரிக்க வைக்க ஆசைப்பட்ட இயக்குநர் கதையின் ஒன்லைனை புதிதாக யோசித்ததை தவிர்த்து படத்தில் ஆச்சரியப்படக்கூடிய காட்சிகள் என்றால் எதுவுமே இல்லை. ரொம்ப சாதாரணமான காமெடிப்படமாக தந்திருக்கிறார்.

நவரச திலகம் – சில இடங்களில் மட்டும்!

Karunakaranma ka pa anandSiddharth Vipinsrushti dangeகருணாகரன்சித்தார்த் விபின்சிருஷ்டி டாங்கேநவரச திலகம் விமர்சனம்மா.கா.பா.ஆனந்த்
Comments (0)
Add Comment