பன்னிகுட்டி- விமர்சனம்

குட்டியாக ஒரு கதைபிடித்து அதைச் சுட்டியாகச் சொல்ல வேண்டும் என்ற முடிவோடு அனுசரண் பன்னிகுட்டி கதையை கையில் எடுத்திருக்கிறார் போல

ஒரு கிராமத்தில் அப்பா அம்மா தங்கையோடு வாழும் கருணாகரன் தனக்கு ஏற்படும் தொடர் பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார் . அவரைக் காப்பாற்றி கோடாங்கி லியோனி முன் நிறுத்துகிறார் ராமர். லியோனி ஒரு பரிகாரம் சொல்ல..அது நிறைவேற. .அடுத்து கருணாகரன் ஒரு பன்னி மீது பைக்கால் மோதிவிடுகிறார். அதற்கு லியோனி சொல்லும் பரிகாரம்..பன்னியோடும், அந்தப் பன்னியை பாதுகாக்கும் யோகிபாபுவோடும் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. இதை வைத்து அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களே பன்னிகுட்டி

நாயகனாக கருணாகரன் தன் இயல்பை மீறாத நடிப்பால் ஈர்க்கவே செய்கிறார். அவரது காதலியான நாயகியும் நடிப்பில் ஓ.கே ரகம். யோகிபாபு காமெடி பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. ராமர், தங்கதுரை, சிங்கம்புலி ஆகியோரும் சிரிப்பிற்கு மினிமம் கியாரண்டி தருகிறார்கள்

கிராமத்தின் நிலப்பரப்பை தன் கேமராவழியே அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இசை அமைப்பாளர் கே பாடல்களில் செலுத்திய கவனத்தைப் பின்னணி இசையிலும் செலுத்தியிருக்கலாம்

படம் கலகலப்பாக நகர்ந்த மாதிரி இருந்தாலும் படத்தோடு நாம் கனெக்ட் ஆக முடியவில்லை. ஆகா அபாரம் என்று சொல்லக் கூடிய எந்த ஐடியாக்களும் படத்தில் இல்லை. பன்னி சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கை காட்சிகளை க்ளைமாக்ஸில் உண்மை என திணிப்பதும் படத்தின் மைனஸ்..

வித்தியாசமான கதையைப் புடித்த இயக்குநர் நிறைய சுவாரஸ்யங்களையும், திரைக்கதையில் அழுத்தத்தையும் சேர்த்திருக்கலாம்

2.5/5

Actor Karunakaranactor Yogi Babudirector AnucharanPanniKutty movie