பட்டதாரி – விமர்சனம்

RATING 2/5

டைட்டிலுக்கேற்ப வேலை கிடைக்காமல் ஊரையே வெட்டியாக சுற்றி வருகிற ஐந்து இளைஞர்களின் மதுரை பேக்ட்ராப் வாழ்க்கை தான் இந்த ‘பட்டதாரி’.

ஐந்து நண்பர்களில் நான்கு பேர் எதாவது ஒரு வகையில் பெண்களை சுற்றி வர வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். அதில் ஹீரோ அபி சரவணனனுக்கு மட்டும் பெண்கள் என்றாலே வெறுப்பு.

அவருடைய அந்த பெண்முகம் பாரா மனசுக்குள் கிறங்கி தன் மனசை பறி கொடுக்கிறாள் நாயகி அதிதி. அபிக்கோ அந்தக் காதலும் பிடிக்கவில்லை. எறிந்து எறிந்து விழுகிறார்.

ஏன் பெண்களைக் கண்டாலே அபி சரவணனுக்கு பிடிக்க மாட்டேன் என்கிறது? என்கிற கேள்விக்கு ப்ளாஷ்பேக்கில் ஒரு கதை. அதில் ஒரு காதலி, ஒரு காதல் அது என்ன? என்பதே ஆஹா சொல்லவைக்கிற கிளைமாக்ஸ்.

ஹீரோவாக அபி சரவணன். பட்டதாரி இளைஞர் கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஊரைச் சுற்றி வம்பிழுத்துக் கொண்டு அலட்சியம் காட்டுகிற போதும், அதிதியின் காதலை மறுக்கிற போது காட்டுகிற கோபத்தின் போதும், தன் காதலி இறந்து விட்டாள் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டு படபடப்போடு வந்து அழுது புலம்புகிற காட்சிகளின் போதும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்.

ரெகுலர் காட்சிகளுக்கு அதிதி, ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு ராசிகா என இரண்டு நாயகிகள். திருத்திய அழகு முகமாக மட்டுமல்ல, நடிப்பிலும் நம்மை விரட்டி விரட்டி வசீகரம் செய்கிறார் அதிதி! அடுத்தது அமீர் படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம். நல்ல எதிர்காலம் இருக்கும்மா! இன்னொரு நாயகியாக வரும் ராசிகா அபி சரவணனுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத தேர்வு.

நண்பர்களாக வரும் அம்பானி சங்கர், கலையரசன், துரை, கார்த்திக் நால்வரில் அம்பானி சங்கரின் பள்ளிக்கூட காதல் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. மற்றவர்கள் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் அவ்வளவே.

நீண்ட நாளைக்குப் பிறகு மதுரையை திரையில் இன்னும் புதிதாக பார்த்த பரவசத்தை தருகிறது சூரியனின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு. எஸ்.எஸ்.குமரனின் பின்னணி இசை மெல்லிய புல்லாங்குழல் ஓசை என்றால், சிங்கிள் சிம், பட்டதாரி, கண்ணோடு என பாடல்களோ சுக ராகம்.

தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறி விட்ட இந்த காலகட்டத்தில் ஆசைப்பட்ட வேலை கிடைக்கவில்லை என்றால் அதற்கான மாற்று வேலையாக டீக்கடை வைப்பது, அல்லது டிபன் செண்டர் வைப்பது மாதிரியான அறுதப்பழசான வேலைகளையே திரையில் காட்டுவது சரியா டைரக்டர் சார்?

படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் வெட்டியாக ஊரைச்சுற்றி வந்து விட்டு, திடீரென்று திருந்தி டீக்கடை வைத்து நல்ல பிள்ளையாக தொழில் செய்ய கிளம்புவது மட்டும் தான் இடிக்கிறது. மற்றபடி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யத்தைக் கூட்டி, காமெடியிலும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால் செண்டம் வாங்கியிருப்பார் இந்த பட்டதாரி.

AbisaravananAdhitiAmbani ShankerAR SankarpandiDuraiKalaiarasanKarthikPattathariPattathari Movie ReviewPattathari ReviewRaasika
Comments (0)
Add Comment