நட்சத்திரங்கள் – பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா, சுசி கணேசன் மற்றும் பலர்
இசை – வித்யாசாகர்
ஒளிப்பதிவு – செல்லதுரை
வகை – ரொமான்ஸ், த்ரில்லர்
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
2006-ஆம் ஆண்டு ரிலீசான ‘திருட்டுப் பயலே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் சுசி கணேசனின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் இந்த ‘திருட்டுப் பயலே 2’.
காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் வேலை செய்யும் பாபி சிம்ஹாவுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், வி.ஐ.பிக்கள் உள்ளிட்ட முக்கிய பெரும் புள்ளிகளின் செல்போன் பேச்சுகளை ஒட்டுக் கேட்கிற முக்கியமான வேலையை கொடுக்கிறார் அவரது உயர் அதிகாரி. அந்த வேலையைச் செய்யும் போதே தன் மனைவி அமலாபாலின் செல்போன் பேச்சையும் ஒட்டுக் கேட்க நேர்கிறது.
அதில் அமலாபாலிடம் ஃபேஸ்புக் மூலம் நண்பராகும் பிரசன்னா அவரை மட்டுமில்லாமல் அவரைப் போலவே பல இளம்பெண்கள், திருமணமான பெண்களை குறி வைத்து சைபர் கிரைம் குற்றங்களை தொடர்ந்து செய்வது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வருகிறது.
பிரசன்னாவின் தொழில்நுட்ப துரத்தலில் இருந்து தன் காதல் மனைவி அமலாபாலை பாபி சிம்ஹா எப்படி மீட்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல், இடைவேளைக்குப் பிறகு கதை என்று வழக்கமாக வருகிற கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் இந்தப்படம் ஆரம்பித்தவுடனேயே கதைக்குள் சென்று விடுவதால் படத்தோடு ஒன்று ரசிக்க முடிகிறது.
ஒரு நேர்மையான அதிகாரியாக அறிமுகமாகும் பாபி சிம்ஹா தனக்கென்று ஒரு அதிகாரம் கிடைத்தவுடன் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்காக பாதை மாறுவது, வில்லனாக வரும் பிரசன்னாவின் ஹைடெக் வசதிகள் கொண்ட வீட்டின் அறிமுகம், அவருக்கும், அமலாபாலுக்குமிடையேயான ஃபேஸ்புக் உறவு, அதிலிருந்து அவரை பாபிசிம்ஹா எப்படி மீட்கப் போகிறார்? என முதல் பாதியில் இருக்கையோடு கட்டிப்போடும் வகையில் படத்தோடு ஒன்றிப் போகச் செய்கிறது படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
இரண்டாம் பாதியில் வெறும் பாபி சிம்ஹா – பிரசன்னாவுக்கான மோதலாக மட்டுமே கதையை ஸ்லோவாக நகர்த்தியிருப்பது எரிச்சல் ரகம்.
அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பணத்தை கை மாற்றிக் கொள்கிறார்கள், காவல் துறையில் போலீஸ் அதிகாரிகளுக்கிடையே இருக்கும் பதவி மோகம், அதற்கான போட்டி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் என சமூக வலைத்தளமே கதியென்று கிடக்கும் பெண்களுக்கான எச்சரிக்கை ஆகியவை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பது ரசனைக்கு புதுசு.
கடந்த சில படங்களாக தொடர்ந்து தோல்விகளைக் கண்டு வரும் பாபி சிம்ஹாவுக்கு இந்தப்படம் நல்ல பெயரைப் பெற்றுத்தரும். முதல் காட்சியில் நல்லவன் போல அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக தனது இன்னொரு திருட்டு முகத்தை காட்டுகிற இடங்கள் யதார்த்தமான, அதே சமயம் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் கூட. அவரது உடலமைப்புக்கு காக்கிச்சட்டை கன கச்சிதம். அமலாபாலுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஏகத்துக்கும் நெருக்கம்!.
ஃபேஸ்புக்கே கதியென்று கிடக்கும் நவீன யுக பெண்ணாக வருகிறார் நாயகி அமலாபால். தனது அந்தரங்க விஷயங்களை முகம் தெரியாத, அல்லது முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பெண்களை எச்சரிக்கும் பெண் கேரக்டர். வீட்டிலேயே இருக்கும் பெண் போல காட்டப்பட்டாலும் அவர் காட்டும் அன்லிமிடெட் கவர்ச்சியில் அவர் நல்ல பெண்ணா? அல்லது கெட்ட பெண்ணா? என்கிற சந்தேகத்தை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கிளப்புகிறது. ரொமான்ஸ், பாடல் காட்சிகளில் பாபிசிம்ஹாவுடன் கூச்சமில்லாமல் நெருக்கம் காட்டியிருக்கிறார்.
ஒரு பெண்ணை எப்படி ஃபேஸ்புக்கில் மடக்குவது? பிரச்சனை என்று வந்தால் எதற்கும், யாருக்கும் பயப்படாமல் இருப்பது? என அசால்ட்டான வில்லத்தனத்தில் அசத்தியிருக்கிறார் பிரசன்னா.
சில காட்சிகளில் இயக்குனர் சுசி கணேசனே ஸ்மார்ட்டான டிடெக்டீவ் ஏஜெண்ட்டாக வருகிறார். அந்த கேரக்டர் கதையின் ஓட்டத்துக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
வித்யாசாகரின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் த்ரில்லர் எபெக்ட்டில் திகிலைக் கூட்டுகிறார்.
‘திருட்டுப் பயலே’ படத்தில் வீடியோ எடுப்பதால் வரும் பிரச்சனையை கதையாக்கி ரசிகர்களை எச்சரிக்கை செய்த சுசி கணேசன் இதில் சமூக வலைத்தளங்கள் மூலம் முன் பின் அறிமுகமில்லாதவர்களால் தனது அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளை காலத்துக்கேற்ற எச்சரிக்கை பிளஸ் விறுவிறுப்பான த்ரில்லர் படமாகவும் தந்திருக்கிறார்.