வணங்கான் – விமர்சனம்

பாலாவின் வணங்கான் எந்த விதத்தில் நம்மோடு இணங்குகிறது?

ஹீரோ அருண் விஜய்க்கு பொசுக் என்று கோபம் வரும். அந்தக் கோபத்திற்குப் பின்னால் 100% நியாயம் இருக்கும். அவரின் கோபத்தைக் கண்டு அவரை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறார் அவரது நண்பர். அங்கு வேலை செய்யும் அருண் விஜய் அங்கு பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடிக்கும் இருவரை கொலை செய்கிறார். மேலும் ஒருவரை கொலை செய்யப் போவதாகச் சொல்கிறார். அந்தக் கொலையை அவர் செய்தாரா இல்லையா? என்பதாக படம் பயணிக்கிறது

நடிகனாக அருண் விஜய்க்கு இந்தப்படம் ஒரு அசுரப்பாய்ச்சல். ஒரு மாற்றுத்திறன் கொண்ட மனிதராக வரும் அவர், எமோஷ்னல் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். ஹீரோயின் கேரக்டர் ஓரளவு நல்ல தடத்தைப் பதித்துள்ளது. தங்கை கேரக்டரில் வருபவரும் கச்சிதமாக நடித்துள்ளார். பாலா கச்சிதமான நடிப்பை வாங்காமல் விடுவாரா? ஆக நடிகர்கள் அனைவருமே படத்திற்கு பெரும்பலம்

ஜிவி இசையில் பாடல்கள் நம் ஆவியோடு கலக்கவில்லை. சாம்.சி எஸ் பின்னணி இசையால் படத்திற்கு நல்ல மைலேஜ் கொடுத்துள்ளார்

அநீதிக்கு எதிராக வன்முறையை கையில் எடுக்கும் ஹீரோவின் கதை தான் என்றாலும், ஓரளவு நல்ல விசயங்களைப் படம் பேசியுள்ளது. ஆழமான கதையோ, கதிகலங்க வைக்கும் காட்சியமைப்புகளோ பாலாவின் இந்த வணங்கானில் இல்லை என்பது நமக்கு ஏமாற்றமே. நீளத்தில் மட்டும் சிறியதாக இல்லாமல், ஆழத்திலும் சிறியதாகப் போய்விட்டது இந்த வணங்கான்
2.5/5

actor Arun VijayDirector BalaVanangaan movie