விடாமுயற்சி- விமர்சனம்

விடாமுயற்சி- விமர்சனம்

வித்தியாச முயற்சி என்று அஜித் எடுத்த வீண் முயற்சியே இந்த விடாமுயற்சி

அஜர்பைஜானில் வாழும் தம்பதி அஜித் திரிஷா தம்பதி. படத்தின் துவக்கத்திலே திரிஷா அஜித்தை விட்டுப் பிரிய முடிவெடுக்கிறார். அவர்களின் பன்னிரெண்டு வருட காதல் கலந்த கணவன் மனைவி வாழ்க்கை முடிவுக்கு வரும் சூழல். திரிஷா, “டிவோர்ஸ் கிடைக்கும் வரை நான் என் அம்மா அப்பாவோடு இருக்கிறேன்” என்று அஜித்திடம் சொல்கிறார். அஜித் தானே ட்ராப் பண்ணுவதாகச் சொல்கிறார். இருவரும் காரில் செல்கின்றனர். அப்போது அர்ஜுன் ஆரவ் ரெஜினா கசண்ட்ரா ஆகியோர் வந்து திரிஷாவை கடத்துகிறார்கள். அதற்கான காரணம் என்ன? அஜித் தன் மனைவியை எப்படி மீட்டார்? பிரிய இருந்த இருவரும் மறுபடி இணைந்தார்களா? என்பதே படத்தின் கதை

அஜித் தன் மாஸ் நடிப்பை ஓரமாக வைத்துவிட்டு, ஆரவ் உள்ளிட்ட எல்லா நடிகர்களிடமும் அடி வாங்கியும், அழுதும் கரைந்தும் இயல்பாக நடித்துள்ளார். பின்பாதியில் தான் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார். திரிஷா தனது நடிப்பில் வழக்கம் போல குறையேதும் வைக்கவில்லை. அர்ஜுன் ரெஜினா கூட்டணி திரையில் டெரர் காட்டியுள்ளனர். ரம்யா ஆரவ் என சில முகங்கள் படத்தில் தோன்றுகின்றன

படத்தில் முதலாவதாக மகுடம் சூடும் கலைஞர் என்றால் அது கேமராமேன் தான். தரமான ஒளிப்பதிவு. அஜர்பைஜான் அழகை அப்படியே அள்ளிக்கொண்டு வந்துள்ளார். அனிருத் தன் இசையில் பெரிய மெனக்கெடல் செய்துள்ளார். ஆனால் படத்தில் அவரின் இசையை வேல்யூ பண்ணுவதற்கான காட்சிகளே இல்லை. பாடல்கள் ஓகே ரகம்

படத்தின் கதையில் துளியும் எதார்த்தம் இல்லை. மேலும் எல்லாக் கேரக்டர்களும் நமக்கு அந்நியமாகவே தெரிகிறார்கள். படத்தின் மிகப்பெரிய மைனஸ் இது. முன்பாதி படமாவது கொஞ்சம் தத்திப்பித்தி ஓடிவிடுகிறது. பின் பாதி நம்மை ஓட விடுகிறது. இரண்டாண்டுகளுக்குப் பின் வெளியான அஜித் படம் இப்படியான சோதனையில் மாட்டியிருக்க வேண்டாம்

–விடா முயற்சி- விபரீத முயற்சி
2.5/5

Actor Ajith Kumaractress trishadirector Magizh ThirumeniVidaamuyarchi movie