அட, அதுக்குள்ளவா..? – தொடர்பு எல்லைக்கு அப்பால் போன ‘அருவி’ டைரக்டர்!

Get real time updates directly on you device, subscribe now.

‘அறம்’ படத்தைப் போலவே 2017ஆம் ஆண்டில் சிறந்த படங்களில் ஒன்றாக விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படம் ‘அருவி’.

புதுமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில் வெளியான இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருந்தார்.

இன்று வரை அந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளும், விருதுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

இப்படி ஆளாளுக்கு ‘அருவி’யை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாலோ என்னவோ, சமீபகாலமாக தனது நடவடிக்கையில் தலைக்கனம் பிடித்தவர் போல கொஞ்சம் கெத்து காட்ட ஆரம்பித்திருக்கிறாராம் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.

சினிமாவில் வளரும் இயக்குநர்கள் ஒரு வெற்றி கிடைத்தவுடன் அதை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் அடுத்த பட வேலைகளை பார்க்கச் சென்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் சினிமாவில் தொடர்ச்சியாக சாதித்திருக்கிறார்கள். ஆனால் அருண் பிரபு புருஷோத்தமனோ சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்று அருவி படத்துக்காக அவருக்கு விருது வழங்கி கெளரவித்ததை வெளிப்படையாக கிண்டல் செய்தார். அதைப் பார்த்து திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதோடு வாயை மூடினாரா என்றால் அதுதான் இல்லை. எப்போதோ ரிலீசாகியிருக்க வேண்டிய படத்தை கிடப்பில் போட்டு காலதாமதம் செய்து விட்டனர் என்று முதல் பட வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தையும் சகட்டு மேனிக்கு வசை பாடி வருகிறாராம்.

அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் அவரை தொடர்பு கொள்வதற்காக யார் போன் செய்தாலும் மனுஷன் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருக்கிறார்.

ஒரு படம் தான் ரிலீசாகியிருக்கிறது. அதற்கே இவ்வளவு ஆட்டம் என்றால் இன்னும் எட்ட வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது? எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறார் என்று பரிதாப்பார்வை பார்க்கிறார்கள் அவரது நட்பு வட்டங்கள்.

ஆயிரம் அருண் பிரபு புருஷோத்தமன்களைப் பார்த்தது தமிழ்த்திரையுலகம்!