விஷாலை நடிகர் சங்கத்துல இருந்து விரட்டணும், இல்ல தமிழ்நாட்டை விட்டே விரட்டணும் – போட்டி போட்டு சபதம் போட்ட பிரபலங்கள்
விஷால் நல்லவர், வல்லவர் என்று அவரைச் சுற்றி ஒரு கூட்டம் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறது.
அதே சமயம் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் பொறுப்புகளுக்கு வந்த பிறகு, வெறும் பேச்சு மட்டும் தான் இருக்கிறது செயல்பாடுகள் இல்லை என்று விஷாலை பொளந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலக பிரபலங்கள்.
குறிப்பாக நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெறக் காரணமாயிருந்த ஜே.கே.ரித்திஷே விஷாலுக்கு எதிராக விழா மேடை ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் நிகழ்ந்த அரசியல் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து, ‘சிவா மனசில புஷ்பா’ என்ற திரைப்படத்தை வராகி என்பவர் நடித்து, இயக்கி உள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் எம்.பி .ஜே.கே ரித்தீஷ், ”நடிகர் சங்கத்துல இந்த முறை விஷால் நிற்கட்டும். அவரை எதிர்த்து நிக்கிறவங்க கூட நான் நிப்பேன். விஷால் என்ன சொன்னாலும் அதை ஏத்துக்க யாருமில்லை.
செங்கல்லை வெச்சுக் கட்டடம் கட்டினா மட்டும் புண்ணியம் வராது. சங்கத்துல இருக்குற உறுப்பினர்களை மதிக்கத் தெரியணும். இந்தச் சங்கம் எங்களுடையது. ஆகஸ்ட்ல இருந்து நாங்கதான் பதவியில உட்காரப்போறோம். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குள் விஷால் இனி நுழையவே முடியாது” அவரை நடிகர் சங்கத்தை விட்டே துரத்தப் போவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்து பேச வந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியோ ”விஷால் க்யூப்புக்கு எதிரா ஒரு ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்கார். ஆந்திராவில் கியூப்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தப்போறோம். அது சரிவரவில்லையெனில், ஸ்ட்ரைக்னு சொல்றாங்க. இவர் பேசாமலே ஸ்ட்ரைக் அறிவிக்கிறார். இவரோட படம் ‘இரும்புத்திரை’ 29-ம் தேதி ரிலீஸ் பண்றார். அதுக்குள்ளே ஸ்ட்ரைக் முடிஞ்சுடும்.
ஆனா, ஸ்ட்ரைக் இருக்கிற சமயங்கள்ல வெளிவர இருக்கிற சின்னப் படங்களோட நிலைமை என்ன ஆகுறது? நீ தமிழன்னு சொல்ற, ஆனா எங்கேயோ நடக்கிற மாநாட்டுல கலந்துக்கப் போறார், இப்படி முரண்பாடான விஷயங்களை பண்ற விஷாலை தமிழ்நாட்டை விட்டே விரட்ட தயாராகி விட்டோம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஒரே மேடையில் இரண்டு திரையுலக பிரபலங்கள் விஷாலுக்கு எதிராக கம்பு சுற்றியது விழாவுக்கு வந்திருந்தவர்களை புருவம் உயர்த்த வைத்தது.
விழாவின் இறுதியில் 100 நலிவடைந்த திரையுலக கலைஞர்களுக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.