”யார் மனசையும் புண்படுத்த விரும்பல..” – கிரேட் எஸ்கேப் ஆனார் ஆர்யா!
வட இந்தியாவிலிருந்து தமிழுக்கு புதிதாக வந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஆர்யாவின் திருமணத்துக்கு பெண் பார்க்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்கிற ரியாலிட்டி ஷோ ஒன்று கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைப் போல, இளம் பெண்கள் சிலர் ஆர்யாவுடன் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடத்தில் நெருங்கிப் பழகி, புரிந்து கொண்டு கிளைமாக்ஸில் அவர்களில் ஒருவரை ஆர்யா தனது வருங்கால குடும்பத் தலைவியாக செலெக்ட் செய்வார் என்று தொலைக்காட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது கலாச்சாரக் கேடு என்று ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், ஆர்யா எந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார்? என்கிற எதிர்பார்ப்பும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்களிடம் ஏற்பட்டது.
அந்த வகையில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி நேற்று (ஏப்ரல் 17) ஒளிபரப்பானது. முன்னதாக அந்த சேனல் சார்பில் நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு முன்பாக ஆர்யா தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்வு செய்து விட்டார் என்பது போலவே பில்டப் கொடுத்து வந்தது. ஆர்யாவும் அதே வேலையை தனது ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் செய்தார்.
ஆனால் சுசானா, அகதா, சீதாலட்சுமி என இறுதித் தேர்வுக்கு வந்த மூன்று இளம் பெண்களில் யாரையும் ஆர்யா தேர்வு செய்யவில்லை. மாறாக “என்னால் யாருடைய மனதையும் புண்படுத்த முடியாது. இது முடிவு இல்லை. ஆரம்பம் தான். இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் தேவை” என்று மூன்று பேரையும் நிராகரித்து விட்டார். மேலும் ”ஒருத்தரை செலெக்ட் செய்து விட்டு மற்ற இரண்டு பேருடைய மனசை புண்படுத்த விரும்பவில்லை. என் கல்யாணம் பத்தி யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்” என்றார்.
ஆர்யாவின் இந்த முடிவை அந்த அப்பாவி மூன்று பெண்களும் ஏற்றுக் கொண்டனர்.
இதனால் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும், டிவியில் பார்த்தவர்களும் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். 37 வயதாகி விட்ட ஆர்யா கண்டிப்பாக வந்திருந்த பெண்களில் யாராவது ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய முடிவைப் பார்த்த ரசிகர்கள் ஆயுள் முழுக்க ஆர்யா ப்ளேபாயாக இருக்கவே ஆசைப்படுகிறாரோ? என்று கிண்டல் செய்தனர்.
ஆக ஆர்யாவை நம்பி வந்த இளம் பெண்கள் கண்ணீரும் கம்பளையுமாக காட்சி தந்து அவர்களின் குடும்பத்தையும் சேர்த்து உலகமே காரித்துப்பியது தான் மிச்சம்.