அயலி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி கல்வியால் தான் வைக்க முடியும் என்பதைப் பேசுகிறது அயலி வெப்சீரிஸ். ZEE5 ஓடிடியில் வெளியாகியிருக்கும் இந்த வெப்சீரிஸின் கதை 1990 காலகட்டத்தில் நடக்கும் கதை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓர் கிராமத்தில் வயதுக்கு வந்த பின் பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாட்டை தமிழ்ச்செல்வி என்ற சிறுமி தான் வயதுக்கு வந்ததை மறைத்துக் கொண்டு உடைக்க நினைக்கிறாள். அவளின் பகுத்தறிவு முயற்சியே சீரிஸின் மீதிக்கதை

தமிழ்ச்செல்வியாக நடித்துள்ள அபி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். போலவே அவரது அம்மா கேரக்டரில் நடித்துள்ள அனுமோல் அருமையான தேர்வு. தாய்க்கும் மகளுக்குமான கெமிஸ்ட்ரி வேறலெவலில் வொர்க் ஆகியுள்ளது. அருவி மதன் அப்பாவாக நச்சென மனதில் பதிகிறார். வில்லனாக வரும் லிங்கா, ஊர்ப்பெரியவராக வரும் சிங்கம் புலி உள்ளிட்ட சீரிஸில் நடித்துள்ள யாவரும் கதையை சீரியஸாக உள்வாங்கி நடித்துள்ளார்கள்.

பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி 90 காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. அது சீரிஸ் நடக்கும் காலகட்டத்தோடு நம்மை கனெக்ட் செய்கிறது. இதே வார்த்தைகள் ஒளிப்பதிவிற்கும் பொருந்தும்

அயலி என்ற பெண் தெய்வத்தை வைத்தே பெண்களுக்கு எதிராக பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு, பெண்களைச் சிறுமைப்படுத்தும் தலைமுறையை நறுக்கென கொட்டியுள்ளார் இயக்குநர் முத்துக்குமார். சரியான கதையை சரியாக திரைக்கதை அமைத்து எட்டு எபிசோட்களையும் ரசிக்க வைத்துள்ளார்

அயலி கவனிக்கப்பட வேண்டிய வெப்சீரிஸ்

4/5