பலே வெள்ளையத் தேவா – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

balle-vellaiya-deva-review

RATING : 2/5

டத்துக்குப் படம் கத்தி, அருவா, ரத்தம் சகிதமாக வந்து கொண்டிருந்த சசிகுமார் அதையெல்லாம் விட்டு விட்டு அதே வில்லேஜ் பேக்ட்ராப்பில் காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் என கொஞ்சம் ரூட்டை மாற்றியிருக்கும் படம் தான் இந்த ‘பலே வெள்ளையத் தேவா’.

மாற்றல் கிடைத்ததால் போஸ்ட் உமனான அம்மா ரோகிணியுடன் ஒரு கிராமத்துக்கு வருகிற ஹீரோ சசிகுமாருக்கு அதே ஊரைச் சேர்ந்த ஹீரோயின் தன்யா மீது காதல்.

தன்யா விரட்ட, சசிகுமார் துரத்த இந்த ட்ராக் ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ஊரில் யார் வீட்டில் டி.டி.ஹெச் கொடை வைத்தாலும் அதை பிடித்து எரிகிற வேலையைச் செய்கிறார் அதே ஊரைச்சேர்ந்த கேபிள் டிவி நடத்தும் வில்லன் கோஷ்டியில் ஒருவரான வளவன்.

திடீரென்று ஒருநாள் சசிகுமாரின் வீட்டு மாடியிலும் ஒரு டி.டி.ஹெச் கொடை நிற்பதைப் பார்க்கும் வளவன் ரோகிணியைக் கூப்பிட்டு ஒத்த பிள்ளை வெச்சிருக்க, அவன் வேணுமா வேணாமா? என்று மிரட்டியனுப்புகிறார்.

கோபத்தோடு வரும் ரோகிணி மகன் சசிகுமாரை கூட்டிக் கொண்டு மிரட்டிய வில்லன் கோஷ்டிகளை அடித்து துவம்சம் செய்கிறார்.

சும்மாயிருக்குமா வில்லன் கோஷ்டி?

பழி வாங்க காத்திருக்கும் அந்த வில்லன் கோஷ்டியிடமிருந்து சசிகுமார் எப்படி சாதுர்யமாக தப்பிக்கிறார்? காதலியை கரம் பிடிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

கிராமத்துக் கதைகளுக்கு தோதான முக அமைப்பு சசிகுமாருக்கு எப்பவுமே கை கொடுக்கும். அவருடைய நடிப்பை முழுமையாகக் காட்ட இந்தப் படத்திலும் அதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கிறது. குறிப்பாக ஹீரோயின் தன்யாவை முதல் முறையாக நேரில் பார்த்தவுடம் ஆமாம், நான் தான் உங்க பொண்ணை பாலோ பண்ணிணேன் என்று தைரியமாகச் சொல்லிவிட்டு முகம் முழுக்க காதலோடு அவரைப்பார்த்து சிரிப்பாரே..? செம… செம…!

Related Posts
1 of 2

நாயகியாக அறிமுகமாகியிருக்கும் தன்யா விஷாலைப் போல நல்ல உசரமாக இருக்கிறார். சில ஆங்கிள்களில் மட்டும் அழகாக காட்சி தருகிறார். பல காட்சிகளில் முத்தின கத்தரிக்காயாட்டம் ஏனோ மனசுக்குள் ஒட்டவே ஒட்டாத முகம்.

கிராமத்துப் பின்னணியில் ஒரு காமெடிப்படம் என்று வாய் நிறையச் சொன்னாலும் அதற்கான அரிச்சுவடே படத்தில் இல்லை. அவ்வளவு ஏன் யோகிபாபு மாதிரியான வளர்ந்து வருகின்ற காமெடியன்கள் கூட படத்தில் இல்லை. சசிகுமாரின் நண்பர் என்று சொல்லிக் கொண்டு கூடவே ஒருவர் வருகிறார். அவர் செய்வதையெல்லாம் காமெடியென்றால் ரசிகர்கள் பாவமில்லை. அப்படி நம்பி நடித்த சசிகுமார் தான் அய்யோ…. பாவம்.

சரி கோவை சரளா இருக்கிறார். காமெடி வருகிறதா? என்றால் அதுவும் இல்லை. வழக்கம் போல காட்டுக் கத்தலாய்க் கத்தி படம் பார்ப்பவர்களை நடுநடுங்க வைக்கிறார். கொஞ்ச காலம் கோவை சரளாவை யாரும் படங்களில் நடிக்க வைக்காமல் இருப்பதே தயாரிப்பாளர்களுக்கு நல்லது.

செஃல்பி காத்தாயி என்கிற பெயரோடு வருகிறார் கோவை சரளா. சில காட்சிகளில் வருகிற போகிறவர்களோடு சேர்ந்து செஃல்பி எடுக்கிறார். டிவி விளம்பரங்களில் வரும் எந்த பொருளாக இருந்தாலும் வீட்டுக்கு வரவழைத்து அதை பயன்படுத்தி விட்டு ஏதாவது சப்பைக் காரணத்தைச் சொல்லி அந்தப்பொருளை திருப்பி அனுப்பி விடுகிறார். இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் காமெடியில் சேர்ப்பது நியாயமே இல்லை. நல்லவேளையாக கோவை சரளாவின் கணவராக வரும் சங்கிலி முருகன் அளவாகப் பேசி நிறைவாக நெகிழ வைக்கிறார்.

ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் கிராமத்து மண் அழகை பச்சை பசேல் என்று காட்டியிருக்கிறது. அதில் கால்வாசி அழகு கூட ஹீரோயின் முகத்தில் இல்லாதது அவர் குறையோ, அல்லது ஹீரோயின் குறையோ இருவருக்கு மட்டும் வெளிச்சம்.

கிடாரி படத்தில் வண்டியில நெல்லு வரும் என்ற ஹிட் பாடலைக் கொடுத்தார் தர்புகா சிவா. அதற்காக இந்தப்படம் முழுக்க அந்த ஒரே ஒரு பாடலைப் பிரித்து மேய்ந்தே அதே டைப் பாடல்களும், பின்னணி இசையுமாக ஒப்பேற்றியிருக்கிறார். இந்த ரேஞ்சுல போச்சுன்னா இன்னு ரெண்டு படம் கூட தாங்காது சாமீ…

போலீசைப் பார்க்கும் போதெல்லாம் கையில் அருவாளை வைத்துக் கொண்டு மறைந்து நிற்கும் ஹீரோயின் அப்பா பாலாசிங் அதற்காக காரணத்தை திரையில் சொல்கிற போது இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பாக்கும் என்று சிரிப்பு வந்து விடுகிறது.

இப்படி படத்தில் சீரியஸாக காட்டுகிற எல்லாக் கேரக்டர்களையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காமெடியனாக்கி விட்டு இது காமெடிப்படம் என்று காட்ட முயற்சிக்கிறார் அறிமுக இயக்குநர் பி.சோலை பிரகாஷ்.

ஆனால் சிரிப்பு ம்ஹூம்…

டைட்டில்ல மட்டும் தான் பலம் இருக்கு!